அரசு நிர்ணயித்து அறிவித்துள்ள கரும்பு கொள் முதல் விலை ஏமாற்றமளிக்கிறது

கரும்பின் கொள் முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.2350/- என்று மாநில அரசு கடந்த திங்கட் கிழமை அறிவித்துள்ளது. இது கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிப்பதாக உள்ளது.   விவசாய இடுபொருட்களின் விலை இக்காலத்தில் பல மடங்கு உயர்ந்துள்ளது. உர விலையையும் டீசல் விலையையும் மத்திய அரசு உயர்த்தியது. இதனால், கரும்பு உற்பத்திக்கான செலவு அதிகரித்துள்ளது. மேற்கண்ட காரணங்களினால் விவசாயம் கட்டுபடியாகாத தொழிலாக மாறி வருகிறது.

விவசாயம் நலிந்து வரும் சூழலில் கரும்புக்கு மாநில அரசு அறிவித்துள்ள விலை கரும்பு விவசாயத்தையும் கரும்பு விவசாயிகளையும் பாதுகாக்க உதவிகரமாக இருக்காது.   மத்திய அரசு அறிவிக்கும் கரும்பு கொள்முதல் விலைக்கு மேல் தேவை அடிப்படையில் கூடுதல் கொள்முதல் விலையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நிர்ணயிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. ஆனால், மாநில அரசு விவசாயிகளின் உற்பத்தி செலவை கணக்கிலெடுத்து கூடுதல் விலையை அறிவிக்கவில்லை.  

கடந்த ஆண்டு மத்திய அரசு ஒரு டன்னுக்கு ரூ.1450/- என விலையை அறிவித்தது. மாநில அரசு ரூ.2100/- என கூடுதல் விலையை அறிவித்தது. கடந்த ஆண்டு கொடுத்த விலையை விட டன்னுக்கு ரூ.250/- மட்டும் உயர்த்தி ரூ.1700/- என நடப்பு ஆண்டுக்கு மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்தது. ஆனால், மாநில அரசு கடந்த ஆண்டு அளித்த விலையான ரூ.2100 உடன் மத்திய அரசு அளித்த ரூ.250/- மட்டுமே சேர்த்து ரூ.2350/- என தீர்மானித்துள்ளது.

தமிழக அரசு தன் பங்கிற்கு நடப்பு ஆண்டில் கூடுதலாக எந்த விலை உயர்வையும் வழங்கவிலை. மத்திய அரசும் கரும்பு சாகுபடிக்கான செலவை கணக்கிலெடுத்து கொள் முதல் விலையை உயர்த்தவில்லை. இது விவசாயிகளின் மத்தியில் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.     எனவே, குறைந்த பட்சம் டன்னுக்கு ரூ.3500/- வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்துகிறது.  

Check Also

உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்!

மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து ...

Leave a Reply