அரசு மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதி செய்ய, தரமான உணவு, கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த, தமிழக அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தமிழகத்தில் அரசு மாணவர் விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி நடைபெறும் மாணவர்களின் தமிழகம் தழுவிய போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தில் 1657 தலித் மற்றும் பழங்குடியினர் நல அரசு விடுதிகளும், 1305 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு விடுதிகளும் உள்ளன. இந்த விடுதிகளில் சமூக ரீதியாகவும், பொருளதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய மற்றும் வறிய நிலையில் உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றார்கள்.

மாணவ – மாணவியர்கள் தங்கி, உண்டு, உறங்கி கல்வி பயிலும் இந்த விடுதிகளில் குடிநீர், கழிவறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாகவும், சுகாதாரமானதாகவும் இல்லாததால் சொல்லொணாத் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். போதுமான பாதுகாப்பு வசதிகளின்றி மாணவிகள் இரவு நேரங்களில் அச்சத்துடனும், முறையான பராமரிப்பற்ற கழிவறைகளால் பல்வேறு நோய்தொற்றுக்கு ஆட்படும் நிலையிலும் இவ்விடுதிகளில் இருந்து வருகின்றனர்.

விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் தரமற்றதாக உள்ளது. ஒருநாள் உணவுக்காக ஒரு பள்ளி மாணவருக்கு ரூ.24.35 காசும், கல்லூரி மாணவருக்கு ரூ.28.22 காசும் மட்டுமே தமிழக அரசு செலவிடும் நிலை உள்ளது. இன்றைய அன்றாட விலை உயர்வு காலத்தில் இது மிகவும் அற்பத்தொகையே ஆகும். இந்த தொகை அருகாமையில் உள்ள கேரள மாநிலத்தில் 2 மடங்காக உள்ளது.

எனவே, ஏழை, எளிய கிராமப்புறத்து பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த அரசு விடுதி மாணவர்கள் எதிர்கொள்ளும் மேற்கண்ட பிரச்சனைகளில் உடனடியாக தலையீடு செய்து அவர்கள் முன்னிறுத்தியுள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. விடுதி மாணவர்களின் உணவுக்கான ஒதுக்கீட்டுத் தொகையை உயர்த்தி தரமான உணவு வழங்குவதை உறுதி செய்யவும், போதிய அடிப்படை வசதிகள் மற்றும் விடுதி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தலித் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் அரசாணை எண்.92-ஐ கறாராக அமல்படுத்த வேண்டுமென்றும், அரசு நிர்ணயம் செய்ததை விட பலமடங்கு கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட ...