இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்திட மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சனிக்கிழமையன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்றுள்ளது. மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள் மற்றும் டீசலையும் பறித்துச் சென்றுள்ளது. மேலும், நேற்று பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சமீபத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 210 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடுகின்றனர். அவர்களது 70 படகுகளும் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மத்திய அரசை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 210 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்படாத சூழ்நிலையில், மேலும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 22 மீனவர்களும், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18  மீனவர்களும் கைது செய்யப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

எனவே, மத்திய அரசு ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 210 மீனவர்களையும், நேற்றும், நேற்று முன்தினமும் கைது செய்யப்பட்டுள்ள 40 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்திடவும், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மேலும் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்தப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

 

Check Also

கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக!

14-11-2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில ...

Leave a Reply