உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (2.2.2016) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு;

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க!

கொச்சியிலிருந்து தமிழ்நாட்டின் வழியாக மங்களூர் வரை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு கெயில் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டது. விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகவும், உயர்நீதிமன்றம் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு சுமூகமான முறையில் தீர்வுகாண வேண்டுமென்று உத்தரவிட்டது. இதனடிப்படையில், தமிழக அரசு விவசாயிகளின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் கெயில் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கருத்து தெரிவித்த அனைத்து விவசாயிகளும், விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கக் கூடாது என்று ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.

இதன் காரணமாகத்தான் தமிழக அரசு, மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்றவும், விளை நிலங்களில் குழாய் பதிப்பு திட்டத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து கெயில் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 1962ம் ஆண்டு பெட்ரோலியம், மினரல்ஸ் பைப்லைன் சட்டத்தின் (PMP Act) அடிப்படையில் தமிழக அரசு தலையிட உரிமையில்லை என்றும், எனவே தமிழக அரசு விதித்த தடை ரத்து செய்யப்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு உடனடியாக இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

1962 பி.எம்.பி. சட்டம் விவசாயிகளின் நிலத்தின் மீதான உரிமையை பறிக்கும் வகையிலான எதேச்சதிகார சட்டமாகும். எனவே இச்சட்டத்தை திரும்ப பெறவும், விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் சட்டங்களை இயற்றவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில செயற்குழு கோருகிறது.

விவசாயிகளின் விருப்பத்திற்கு விரோதமாக அவர்களுடைய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. எனவே, தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

அயோத்தி: நீதிமன்ற நடவடிக்கைகளை நிலைகுலைவிக்காதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்களும், மத்திய பாஜக அரசாங்கத்தில் அங்கம் வகித்திடும் அமைச்சர்களும், 1992 இல் பாபர் மசூதியைத் தகர்த்து, நாடு முழுதும் ...