உத்வேகமளிக்கும் உத்தபுரம் வெற்றி!

உத்வேகமளிக்கும் உத்தபுரம் வெற்றி! தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டு!  

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் முயற்சிகளின் காரணமாக உத்தபுரம் தலித் மக்களுக்கு மற்றொரு வெற்றியாக அவர்களின் முத்தாலம்மன் கோயில் வழிபாட்டு உரிமை மீட்கப்பட்டுள்ளது.

1989-ம் ஆண்டு ஆதிக்க சக்திகளால் கட்டப்பட்ட உத்தபுரம் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி 2008 ஜூன் 6ம் நாள் உடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உயர்சாதி மக்கள் வாழ்ந்த பொதுச்சாலையில் தலித்துகளும் செல்லும் வகையில் ஒரு பாதை உருவாக்கித் தரப்பட்டது. சிபிஐ (எம்) அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர். பிரகாஷ்காரத் 2008, ஜூன் 7ம் நாள் வருகை தந்தையொட்டி அதற்கு முன்னதாக இப்பணிகள் நடந்தன என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.

19 ஆண்டுகளுக்குப் பிறகு தலித் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்த இந்த 2 வெற்றிகளும் அம்மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்ததோடு தமிழ்நாடு மட்டுமல்ல தேசம் தழுவிய அளவில் வரவேற்பை பெற்றன. இருப்பினும் உத்தபுரம் தலித் மக்கள் முத்தாலம்மன் கோவிலில் அரசமர வழிபாடு, பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்தல், தங்களது உரிமைகளுக்காகப் போராடிய போது காவல்துறையினரால் போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுதல், தலித் குடியிருப்பை நோக்கிச் செல்லும் சாக்கடையை வேறுபாதைக்குத் திருப்புதல் போன்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைமையில் போராடி வந்தார்கள்.

2010ம் ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் தோழர்கள் டி.கே. ரங்கராஜன் எம்.பி., தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் பி. சம்பத், பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், அண்ணாதுரை எம்.எல்.ஏ., மதுரை மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ், மாதர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பொன்னுத்தாய் உள்பட பலரையும் தாக்கி கைது செய்து காவல்துறை வேன்களில் தூக்கி வீசியது. இதில் தோழர். பொன்னுத்தாயின் வயிற்றில் காவல்துறையினர் மிதித்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 மாத காலம் சிகிச்சை பெற்றார்.

இதே போல் 2011ல் சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, பி. சம்பத் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்) ஏ. லாசர் எம்.எல்.ஏ., மகேந்திரன் எம்.எல்.ஏ., சாமுவேல்ராஜ் (பொதுச் செயலாளர்) ஆகியோர் தலைமையில் 4 முனைகளிலிருந்து முத்தாலம்மன் கோவில் ஆலய நுழைவிற்குச் சென்ற போது அனைவரும் கைது செய்யப்பட்டனர். உத்தபுரம் மக்களின் உரிமைப் போராட்டங்களில் மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பி. சண்முகமும் பங்கேற்றுள்ளார்.

சென்னை மாநகரிலும் உத்தபுரம் தலித் மக்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். உத்தபுரம் மக்களின் முக்கிய தலைவர்களான தோழர்கள். பொன்னையா, சங்கரலிங்கம் உள்பட பல பெண்களும், ஆண்களும் பலமுறை கைது செய்யப்பட்டு பல நாட்கள் மதுரைச் சிறையிலும், திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவ்வாறு ஏராளமான அடக்குமுறைகள் தொடர்ந்து ஏவப்பட்டபோதிலும் உத்தபுரம் தலித் மக்கள் மனம் தளராது உறுதியுடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைமையில் தொடர்ந்து போராடி வந்தனர். அடுத்த கட்ட போராட்டத்திற்கும் தயாராயினர். உத்தபுரம் தலித் மக்களின் தொடர் போராட்டங்களாலும் பல வடிவிலான தீண்டாமைக் கொடுமைகள் நீடித்ததாகவும் உத்தபுரம் தலித் மக்களுக்கும் இதர சமூக மக்களுக்குமிடையே சுமூக உறவு இல்லாமல் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டது.

இப்பின்னணியில் தான் தற்போதைய மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அஸ்ரா கார்க் அவர்களின் பெரு முயற்சியாலும் அவர் முன்னிலையிலும் இரு தரப்பு மக்களுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் முத்தாலம்மன் கோவில் அரச மர வழிபாடு, பேருந்து நிறுத்த நிழற்கொடை அமைத்தல், இருதரப்பினர் மீதுமுள்ள காவல்துறை வழக்குகளை வாபஸ் பெறுதல் போன்ற அம்சங்களை ஏற்றுக் கொண்டு 20.10.2011ல் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டிற்கு இதர சமூக மக்களும் முன்வந்தது பாராட்டுக்குரியதாகும்.

இந்த உடன்பாட்டில் அடிப்படையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு 10.11.2011 அன்று உத்தபுரம் தலித் மக்கள் முத்தாலம்மன் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்தியதும் அவர்களை இதர சமூகப் பிரதிநிதிகள் வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றதும் உத்வேகமான நிகழ்வுகளாகும். தலித் மக்கள் ஒன்றுபட்டும் இதர சமூக உழைப்பாளி மக்களின் ஆதரவுடனும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற ஜனநாயக அமைப்பின் தலைமையிலும் போராட்டங்களை நடத்தினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு உத்தபுரம் தலித் மக்களுக்கு கிடைத்துள்ள வெற்றிகள் சான்றாகும்.

காலதாமதமானது என்றாலும் 20.10.2011 தேதிய உடன்பாட்டிற்கும் அவற்றைத் தொடர்ந்து 10.11.2011 நாள் ஆலய வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அஸ்ரா கார்க் அவர்களையும், மாவட்ட நிர்வாகத்தையும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டுகிறது. தீண்டாமையின் அடையாளமாய் காட்சியளித்த உத்தபுரம் தற்போது தீண்டாமை ஒழிப்பிற்கு அடையாளமாக முன்னேறி வருகிறது. உத்தபுரம் மக்களின் இதர கோரிக்கைகளான பேருந்து நிறுத்த நிழற்கொடை அமைப்பது, வழக்குகளை வாபஸ் பெறுவது, உருவாக்கப்பட்ட பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது ஆகியவையும் 20.10.11 தேதிய உடன்பாட்டின்படி விரைவில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

தலித் மக்களின் குடியிருப்பு வழியாக செல்லும் சாக்கடையை வேறுபாதைக்கு திருப்புவது, ஒட்டுமொத்த கிராம மக்களின் முன்னேற்றத்திற்கான பல வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றுவது போன்ற கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உத்தபுரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இணக்கமான சூழலை பலப்படுத்துமாறும் உத்தபுரம் தலித் மற்றும் இதர பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறும் தமிழ்நாடு அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

உத்தபுரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தலித் மக்கள் தங்களது மனித உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் மீட்டெடுக்க ஒன்றுபட்டு செயலாற்றுமாறும், தலித் மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு இதர ஜனநாயக சக்திகள் பேராதரவு தருமாறும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக் கொள்கிறது. தலித் மக்களையும் அனைத்து ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டி தீண்டாமைக் கொடுமைகளை வேரறுக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராடும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். 

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply