உலகப் பெண்கள் தினம், சிபிஐ(எம்) வாழ்த்துக்கள்!


07.03.2013
 
8 மணி நேர வேலை, வாக்குரிமை, உலக சமாதானம் ஆகிய முப்பெரும் கோரிக்கைகளை முன்வைத்து, 1910ல் கோபன்ஹேகனில் கூடிய இரண்டாவது உலக சோஷலிசப் பெண்கள் மாநாட்டில், சோஷலிச இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான கிளாரா ஜெட்கின் முன்மொழிந்த பிரகடனத்தின் அடிப்படையில், உலகெங்கும் நடக்கும் பெண்களின் போராட்டங்களுக்குப் பரஸ்பரம் ஆதரவும், ஒத்துழைப்பும் தருவதற்கான தினமாக உருவானது தான், உலகப் பெண்கள் தினம்.
 
100 ஆண்டுகளுக்கு மேல் கடந்த பின்னும், அந்தக் கோரிக்கைகளின் தேவை, இன்னும் நீடிக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் பின்னணியில் தொழிலாளர் நல சட்டங்கள் பின்னடைவு, தொழிற்சங்க உரிமைகள் மறுப்பு, மொத்த உழைப்பாளிகளில் 93 சதவிகிதமாக உள்ள முறைசாரா துறையினருக்கு சட்டப் பாதுகாப்பின்மை, வாழ்வதற்கேற்ற கூலி கிடைக்காமை என்ற பல தாக்குதல்களை, பெண் தொழிலாளிகளும் சந்தித்துக் கொண்டுள்ளனர். விவசாயத்தில், கட்டுமானத்தில், நெசவுத் தொழிலில், உப்பளத்தில், தையலில், ஏற்றுமதி வளாகங்களில், சுமங்கலி திட்டத்தில், இன்ன பிற துறைகளில் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கால்சென்டர், தகவல் தொழில்நுட்பத் துறைகளிலும் கூட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வெளி மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்து இங்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்கள், குறிப்பாக, பெண்களின் நிலை, மிக மோசமாக உள்ளது. ஊரக வேலை உறுதி திட்டத்தில், சட்டக் கூலி கிடைப்பதில்லை.   தனித்து வாழும் பெண்கள் கண்ணியமாக வாழ உதவும் சில்லறை வர்த்தகத் துறை, பன்னாட்டு  நிறுவனங்களின்  லாபவேட்டைக்குப் பலிகடாவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.   இந்த நடவடிக்கைகள் அத்தனையும் தொடர்ந்து உயரும் விலைவாசிக்கு மத்தியில் செய்யப்படுவதுதான் சொல்ல முடியாத கொடூரம்.
 
33 சதவிகித இட ஒதுக்கீடு இன்னும் சட்டமாகவில்லை. உள்ளாட்சி நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் முழுமையாக சுயமாக செயல்படும் சூழல் இல்லை. தலித் பெண் பிரதிநிதிகள் என்றால், கூடுதலாக சாதீய பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
 
பெண்கள் மீதான வன்முறை அபாயகரமாக அதிகரித்து வருவது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. வரதட்சணை, பாலியல் வன்புணர்வு, இணையதளக்குற்றங்கள், கௌரவக் குற்றங்கள், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல், பள்ளி மாணவிகளுக்குப் பாதுகாப்பின்மை போன்றவை  முக்கிய பிரச்னைகளாக முன்னுக்கு வருகின்றன. சில புதிய சட்டங்கள், ஜனநாயக இயக்கங்களின் போராட்டங்களால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்த தொடர் நிர்ப்பந்தம் தேவைப்படுகிறது.  பெரிதும் பேசப்பட்ட சுய உதவி குழுக்கள் இயக்கம் கூட இன்று, நுண்நிதி நிறுவனங்களின் வருகையால் சவாலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவற்கு பதிலாக, ஊக்கப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. 4 சதவீத வட்டியில் கடன் கேட்டால் அதை செய்ய மறுக்கிற அரசு, யாருமே கேட்காத பெண்களுக்கான பொதுத்துறை வங்கி அமைக்க வாக்குறுதி கொடுக்கிறது.
 
தலித், ஆதிவாசி, சிறுபான்மை பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். பாலினப் பாகுபாடு பல துறைகளில் பல இடங்களில் நிலவுகின்றன. அதே சமயம், இத்தகைய பிரச்னைகளுக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் போராட்டங்களில் கணிசமான பெண்கள் பங்கேற்பைப் பார்க்க முடிகிறது. பாலின சமத்துவத்துக்கான போராட்டம் ஒருபுறம் ஜனநாயகத் தேவையாகவும், மறுபுறம் சமூக மாற்றத்துக்கான இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இத்தகைய போராட்டங்கள் பல முனைகளில் துடிப்புடன் எழுவதை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கும், ஊக்குவிக்கும் என்பதுடன், தமிழகத்தில் இவற்றைக் கட்சியின் சார்பில் முன்னெடுத்துச் செல்லவும் உறுதியேற்று உலகப் பெண்கள் தின வாழ்த்துக்களை, உரித்தாக்கிக் கொள்கிறது.

Check Also

5, 8 வகுப்பு பொதுத் தேர்வு திட்டத்தை உடனே கைவிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்

மத்திய பாஜக அரசின் வற்புறுத்தலை ஏற்று தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டே (2018-19) 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ...

Leave a Reply