உலக புத்தக தினத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

மானுடத்தின் மகத்தான அடையாளம் அறிவு. அந்த அறிவின் துணையுடன் மனிதர்கள் கண்டுபிடித்த ஈடு இணையற்ற கருவிதான் புத்தகம். பனை ஓலை ஏடுகள், உலோகத் தகடுகள், காகிதத் தொகுப்புகள், இன்று மின்னணுப் பதிப்புகள் என்று வடிவங்கள் மாறிக்கொண்டிருந்தாலும் புத்தகத்தின் அடிப்படைத் தேவையும் ஆற்றலும் தொடர்கின்றன.

அரசியல், இலக்கியம், வரலாறு, அறிவியல் என்று புத்தகங்கள் தாங்கி வருகிற தகவல்களும் செய்திகளும் முழு விடுதலையும் சமத்துவத்தையும் நோக்கிய மனிதர்களின் பயணத்திற்குத் தடம் அமைத்துக்கொடுக்கின்றன. உலகின் மிகச்சிறந்த தத்துவ மேதைகள், அரசியல் ஆசான்கள், அறிவியல் சாதனையாளர்கள், மனிதநேயப் போராளிகள் அனைவரும் தீவிர புத்தகக் காதலர்களாகவும் இருந்தார்கள் என்பது தற்செயலானது அல்ல.

எந்த அளவுக்கு ஒரு சமுதாயம் புத்தகங்களை வாசிக்கிறதோ அந்த அளவுக்கு அது புதுமைகளை நேசிக்கிற சமுதாயமாக, பிற்போக்குத்தனங்களிலிருந்து விடுபட்ட சமுதாயமாக முன்னேறிச் செல்லும். புத்தகங்களைக் கொண்டாடுகிற சமுதாயத்தில் சக மனிதர்கள் மீதான நேசமும் மதிப்பும் மிகுந்திருக்கும்.

இந்த உணர்வோடுதான் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த எழுத்துலகப் படைப்பாளிகள், பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், புத்தக அன்பர்கள், ஆவணத் தொகுப்பாளர்கள், நூலகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரது மாநாடு ஒன்று 1971 அக்டோபர் 22 அன்று பெல்ஜியம் நாட்டின் தலைநகரமான பிரஸ்ஸல்ஸ்சில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் 1972ம் ஆண்டை உலகப் புத்தக ஆண்டாகக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அனைவருக்கும் வாசிப்பு உரிமை, புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி, படைப்பாளி – பதிப்பாளர் – வாசகர் இணைப்பு, புத்தக வாசிப்பு – பராமரிப்பு – தொகுப்பு, அனைத்து மொழிகளிடையே புத்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட இலக்குகளை அந்த மாநாடு நிர்ணயித்தது. அந்த இலக்குகளை நோக்கிச் செல்வதன் ஒரு உலகளாவிய இயக்கமாகவே 1996 ஏப்ரல் 23 உலகப் புத்தக தினம் தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர் பிறந்தநாளும் நினைவுநாளுமான இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தொடங்கிய உலகப்புத்தக தின கொண்டாட்டம் ஆண்டுதோறும் தொடர்கிறது.

இன்றைய உலகமயப் பொருளாதார வேட்டை ஒவ்வொரு தனி மனிதரையும் தனித்தீவாக மாற்ற முயல்கிறது. அப்படி மனிதர்களைத் தனித்தீவுகளாக்குவது முதலாளித்துவத்தின் ஒரு தேவையாகியிருக்கிறது. அதன் உற்பத்திக்கும் சந்தை ஆக்கிரமிப்புக்கும் தேவையான அளவுக்குப் படித்திருந்தால் போதும் என நவீன அடிமைகளை வார்த்துக்கொண்டிருக்கிறது. மாற்றுச் சிந்தனைகள் வளரவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த உலக சமுதாயத்தின் வளர்ச்சியையே முடக்குகிற இந்தப் போக்கிற்கு எதிரான விழிப்புணர்வையும் மாற்று முயற்சிகளையும் அடையாளப்படுத்துகிற நாள்தான் ஏப்ரல் 23.

தமிழகத்தில் இந்த நாளை உற்சாகத்துடன் கடைப்பிடிக்கிறவர்களிடமிருந்து, மாநில அரசு தனது நூலகக் கொள்கையை வெளிப்படையானதாக, விரிந்த நோக்கங்கள் கொண்டதாக உருவாக்கிக்கொள்ள வேண்டும், நுலகங்களுக்கு அனைத்து தரமான நுல்களும் வாங்கப்பட வேண்டும், பள்ளி/கல்லூரி நூலகங்கள் புத்தகச் சோலைகளாக்கப்பட வேண்டும், கிராமங்களில் பயனற்ற கட்டடங்களாக இருக்கும் நூலகங்கள் புத்தகத் தோட்டங்களாக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் எழுகின்றன. அந்தக் கோரிக்கைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது முழு ஆதரவை அளிக்கிறது.

புத்தக வாசிப்பும், புத்தகப் பரிசளிப்பும் ஒரு ஆரோக்கியமான பண்பாடாக மேலோங்கிட வேண்டும் என்ற விருப்பத்துடன் கட்சியின் மாநிலச் செயற்குழு உலகப் புத்தக தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

Check Also

நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்! – யூசுப் தாரிகாமி

பாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்! - யூசுப் தாரிகாமி

Leave a Reply