ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்த்த வாக்காளர்களுக்கு இடதுசாரி கட்சிகள் நன்றி

நடைபெற்று முடிந்த ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் சி.மகேந்திரன் வேட்பாளராக போட்டியிட்டார். திராவிடர் கழகம், தமிழர் தேசிய முன்னணி, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ-விடுதலை), எஸ்யுசிஐ மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ – மக்கள் விடுதலை) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. தோழர் சி.மகேந்திரனுக்கு 9,710 வாக்குகள் கிடைத்துள்ளது. ஆதரவு அளித்த கட்சிகளுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் நன்றியைத் உரித்தாக்கிக் கொள்கிறோம்.

தேர்தல் துவங்கியது முதலே போட்டிக்கு சம வாய்ப்புகளற்ற நிலைமை இருந்தது. முதலமைச்சர் போட்டியிடுவதற்கென்றே இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்தது, இந்தியாவின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த காலத்திற்குள்ளேயே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது, அனைத்து அமைச்சர்களும் தொகுதிக்குள் இருந்து கொண்டு தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, கடந்த 5 முறை சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்திருந்த அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதைப் போன்று காட்டிக் கொண்டது, அரசு நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டது, பணபலம், அதிகார துஷ்பிரயோகம், அதிகாரபலம் இவையனைத்தையும் மீறி இடதுசாரி வேட்பாளருக்கு கிடைத்துள்ள ஒவ்வொரு வாக்கும் மாசுமருவற்ற வாக்குகள். பணத்தாசை, மிரட்டல், அச்சுறுத்தல் அனைத்தையும் மீறி இடதுசாரி வேட்பாளருக்கு கிடைத்துள்ள ஒவ்வொரு வாக்கும் தமிழகத்தில் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் முனைப்புள்ள மக்கள்சக்தி இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

நடுநிலையாக நடந்து கொள்ள வேண்டிய தேர்தல் ஆணையம் கள்ள ஓட்டுக்கள் போடுவதை கைகட்டி வேடிக்கை பார்த்தது, ஒரு வாக்குச் சாவடியில் 100 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகும் அளவிற்கு தேர்தல் ஆணையம் ‘நடுநிலைமையாக’ நடந்து கொண்டது. இவை அனைத்தையும் மீறி இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட தோழர் சி.மகேந்திரன் அவர்களுக்கு கிடைத்துள்ள வாக்குகள் இடதுசாரிகளின் மாற்று கொள்கைகளை, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை, ஊழலுக்கு எதிரான யுத்தத்தை, மக்கள் நலனுக்கான போராட்டங்களை நடத்துவதற்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இடதுசாரி கட்சிகள் இன்னும் முனைப்புடனும், ஊக்கத்துடனும் செயல்படும். வாக்களித்தோருக்கும், ஆதரவளித்த கட்சிகளுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜி. ராமகிருஷ்ணன்

செயலாளர் – சிபிஐ (எம்)

இரா. முத்தரசன்

செயலாளர் – சிபிஐ

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.