ஒக்கி புயல் – விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தென்தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெய்த கன மழையும், அடித்த ஒக்கி புயலும் கடுமையான சேதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் கனமழையினாலும், சூறைக்காற்றாலும் 950 மின்கம்பங்கள் சாய்ந்து 7 பேர் பலியானதோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. இதுவரையில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வீசிய சூறைக்காற்றால் தென்னை, ரப்பர் மரங்கள் சாய்ந்ததோடு, வாழை, எள் போன்ற சாகுபடி பயிர்கள் பாழாகியுள்ளன. மாவட்டத்தில் குடியிருப்புகள் உள்ளிட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் சூறைக்காற்றினால் 60 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டத்திலும் பல பகுதிகளில் மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்துள்ளன. இந்த இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழையால் பாதிப்புகள் உருவாகியுள்ளன. இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒக்கி புயலால், கன மழையினால் கடுமையான பாதிப்புக்குள்ளான கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதோடு புயல் மழையால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டுமென்றும், அழிந்த ரப்பர், தென்னை, வாழை, எள் போன்ற பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பேனர் சரிந்து இளம் பெண் மரணம் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு சிபிஐ(எம்) கண்டனம்!

ஆளும் கட்சியினரின் அராஜக, அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளால் ஏற்பட்ட இளம்பெண் சுபஸ்ரீயின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது குடும்பத்தாருக்கு அனுதாபத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.