ஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிபிஐ(எம்) வடசென்னை மாவட்டக்குழுவின் பத்திரிகைச் செய்தி;

இந்திய குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் வருகை தர உள்ளார். ஒரு நாட்டின் அதிபர் இன்னொரு நாட்டிற்கு சென்று வருவதும், சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் உலக மரபு ஆகும். ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வருவதில் உள்நோக்கம் உள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகளும் தேசபக்தி உள்ள அனைவரும் ஒபாமா வருகையை ஆட்சேபிக்கின்றனர்.

அமெரிக்கா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தையை அகல திறந்துவிட வேண்டும் என்பதற்காகவும், நீண்ட காலமாக அமெரிக்கா வலியுறுத்திவரும் சில்லறை வர்த்தகத்தில் அந்திய முதலீட்டை அனுமதிப்பதை விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகவும், உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா வலியுறுத்திவரும் உணவுப் பாதுகாப்பு திட்டத்தை (மான்யம் அளிப்பதை நிறுத்துவது) கைவிட வைப்பதற்காகவும், அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க பயன்படும் அணு உலைகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்காகவும், இந்தியாவில் உள்ள அணு விபத்து இழப்பீட்டுச் சட்டத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்பதற்காகவும், அமெரிக்க மருந்து நிறுவனங்கள் மருந்துகளை இந்தியாவில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக காப்பீட்டுச் சட்டத்தை பலவீனப்படுத்த வேண்டுமென்பது போன்றவைகளை நிறைவேற்ற வலியுறுத்துவதற்காகவே அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் இந்தியா வருகை தர உள்ளார்.

இந்தியாவில் இதுவரை பாரம்பரியமாக கடைப்பிடித்து வந்த அணிசாராக் கொள்கை மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்பு பாராட்டுவது என்று இருந்ததற்கு மாறாக தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அரசு அமெரிக்காவுடன் கேந்திர கூட்டாளியாகவும் மாற்றுவதற்கான முயற்சியாக அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை உள்ளது. எனவே 24.1.2015 அன்று நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கங்களை நடத்த இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.

அதன் அடிப்படையில் சென்னையில் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை (இந்தியன் ஆயில் பவன் எதிரில்) 2வது தெருவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) மாநில செயலாளர் பாலசுந்தரம், எஸ்.யு.சி.ஐ(சி) அமைப்பின் மாநில செயலாளர் ஏ.ரெங்கசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இடதுசாரி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள்

எல்.சுந்தரராஜன் சிபிஐ(எம்),

ஏ.பாக்கியம்சிபிஐ(எம்),

பி.சம்பத் சிபிஐ,

எஸ்.ஏழுமலை சிபிஐ,

ஏ.சேகர் சிபிஐ(எம்-எல்),

சுருளி ஆண்டவர் எஸ்யுசிஐ(சி).

Check Also

நெல்லை பத்திரிக்கையாளர்கள் கைது – சிபிஐ(எம்) கண்டனம்

இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சமபந்தமாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் ...