கட்சியின் மாவட்டச் செயலாளர் வீரபத்திரனை கொலை செய்ய முயற்சி மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.வீரபத்திரன் 22.5.2012 அன்று இரவு 9.15 மணியளவில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, திருவண்ணாமலை நகர்மன்ற உறுப்பினர் வெங்கடேசன், அவரது சகோதரர் செல்வம், மைத்துனர் துரைமுருகன் ஆகியோர் வீரபத்திரனின்  கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இந்த கொலைவெறிச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

திருவண்ணாமலையில் வைரக்குன்று என்னும் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை  நகர்மன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் அவரது சகோதரர் செல்வம் ஆகியோர் அபகரித்தது குறித்து  மார்க்சிஸ்ட் கட்சியின் புகார்  அடிப்படையில், அரசு நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டது. இதனால் வெங்கடேசன், செல்வம் ஆகியோர் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவரும், கட்சியின் மாவட்டத்தலைவர்களில் ஒருவரான பலராமனை பிப்ரவரி 5, 2012 அன்று தாக்கியுள்ளனர். இது குறித்து அவர்கள் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறை சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெங்கடேசன் மீது 2 கொலை வழக்குகள் உள்ளிட்டு பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்  கள்ளச்சாராய வியாபாரத்தோடு தொடர்புடையவர். இத்தகைய சமூக விரோத குற்றச்செயல் பின்னணி கொண்ட வெங்கடேசனை கைது செய்து  காவல்துறை சட்டரீதியான  நடவடிக்கைகளை எடுக்க  மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்தே மேற்கண்ட நேற்றைய(22.5.2012) கொலைவெறிச் சம்பவம் நடந்துள்ளது.  

எனவே, கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர்களில் ஒருவரான பலராமன் ஆகியோரைத் தாக்கி கொலைசெய்ய முயன்ற  சமூக விரோதிகளான நகர்மன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவரது சகோதரர் செல்வம், மைத்துனர் துரைமுருகன் ஆகியோர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து, உடனடியாக அவர்களைக் கைது செய்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாத மதவெறியர்கள், பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Leave a Reply