கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை உத்தரவாதப்படுத்துக!

இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நலிவடைந்த பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25 சதவிகிதம் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அரசு உதவி பெறாத பள்ளிகளில் மாணவர்களுக்கான செலவை அரசாங்கம் அளிக்கும் என்று சட்டம் உறுதி செய்திருக்கிறது. இந்நிலையில் இதுவரையிலும் இந்தப் பணத்தை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசாங்கம் கொடுக்கவில்லையென்றும், அதனால் இந்தாண்டு இச்சட்டத்தின் அடிப்படையில் நலிந்த பிரிவினர் 25 சதவிகிதம் பேருக்கு பள்ளிகளில் அனுமதி வழங்கப்போவதில்லை என்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஆரம்ப முதலே தனியார் பள்ளிகள் இச்சட்டத்தை பல்வேறு காரணங்களை கூறி எதிர்த்து வந்ததை அரசுகளும், மக்களும் அறிவார்கள். இந்நிலையில் அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான தொகையை தரவில்லை என்று கூறி இந்தப் பொறுப்பை தட்டிக்கழிக்கும் முயற்சியாகவே மேற்கண்ட அறிவிப்பு இருக்கிறது. எனவே தமிழக அரசாங்கம் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையினை முழுமையாக, உடனடியாக கொடுத்திட வேண்டும். மேலும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் சட்டத்தின் அடிப்படையிலான இந்த 25 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். அப்படி நிறைவேற்றாத பள்ளிகளை இந்தாண்டிலிருந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சில பள்ளிகள் தாங்கள் சேர்த்துள்ள மாணவர்களின் ஒரு பகுதியினரையே இந்தச் சட்டத்தின் அடிப்படையில் சேர்த்ததாக ஆவணங்கள் தயார் செய்திருப்பதாகவும், கல்வித்துறை அதிகாரிகள் இதை கண்டும், காணாமல் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. தமிழக அரசாங்கம் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு சட்டம் முழுமையாக அமல்படுத்துவது உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக ஈரோட்டில் போராடிய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

உயர்மின் அழுத்த கோபுரங்களை விளை நிலங்களில் அமைப்பதை கைவிடவும், மாற்றுப் பாதையில் கேபிள் மூலமாக கொண்டு செல்லவும் வலியுறுத்தி இன்று ...

Leave a Reply