காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாமல் காய்ந்து கருகி வருகிறது. காவிரி கண்காணிப்புக் குழுவும், உச்ச நீதிமன்றமும், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு 12 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டுமென உத்தரவிட்ட பிறகும், தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு மறுத்து விட்டது. தலையிட்டு தண்ணீர் பெற்றுத் தர வேண்டிய மத்திய அரசு பாரமுகமாக உள்ளது. இச்சூழலில் சம்பா பயிர்கள் அழிந்து விவசாயிகள் வாழ்வு இருள்மயமாகி வருகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் திறந்துவிட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை வற்புறுத்திட வேண்டும்.  

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவினை ஒரு மாத காலத்திற்குள் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உச்ச நீதிமன்றமும் அதனை ஏற்று தவறாது நிறைவேற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகத்திலுள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரைச் சந்தித்து நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை அரசிதழில் வெளியிடக் கூடாது என வற்புறுத்த உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.  

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரைச் சந்தித்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை ஒரு மாத காலத்திற்குள் அரசிதழில் வெளியிட கோர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.   தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி மேற்கண்ட ஏற்பாட்டினை காலதாமதம் இல்லாமல் நிறைவேற்ற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply