காவிரி நதி நீர் பிரச்சனை: இரண்டு மாநில மக்களின் ஒற்றுமையை பாதுகாக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

காவிரி நதி நீர் பிரச்சனையில் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு தொடுத்த வழக்கில், தினசரி விநாடிக்கு 15000 கன அடி வீதம் தண்ணீர் 10 நாட்களுக்கு கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது. கர்நாடக மாநிலத்தில் பரவலாக எழுந்துள்ள எதிர்ப்புக்கு மத்தியில், அம்மாநில அரசு தண்ணீரைத் திறந்துவிட்டது. கர்நாடக அரசு மேற்கொண்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று விநாடிக்கு 12000 கனஅடி மட்டும் திறந்துவிட வேண்டுமென்று தீர்ப்பளித்துள்ளது.

இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் ஒரு தமிழ் இளைஞர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் கண்டனத்துக்குரியதாகும். அதன் எதிர்வினையாக, தமிழகத்தில் கன்னட நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளதும் ஏற்க முடியாதது.

மாநில நலன்களுக்காக, உரிமைகளுக்காகக் குரல் எழுப்புவது வேறு. இரு மாநிலங்களில் உள்ள அப்பாவி மக்களையும், அவர்களது சொத்துக்களையும் தாக்குவது, நாசப்படுத்துவது, குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக இப்பிரச்சனையை இரு மாநில மக்களுக்கிடையிலான மோதல்களாக மாற்றுவதும் பிரச்னையைத் தீர்க்க உதவாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப்பிரச்சனையை, இரண்டு மாநில மக்களுக்கு இடையிலான மோதலாக உருவாகிவிடாமல் இரண்டு மாநில மக்களுடைய ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஜனநாயக இயக்கங்களுக்கு உள்ளது. இரண்டு மாநிலங்களிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பாடாமல் அமைதியை பாதுகாப்பதற்கு தமிழகம், கர்நாடக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமலாக்கிட அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்!

மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து ...