குட்கா விவகாரத்தில் சுகாதரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

குட்கா விவகாரத்தில் தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கடலூரில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குட்கா, பான்மசாலாக்கள் உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தமிழகத்தில் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குட்கா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பிடிபட்ட குறிப்பேட்டில், ஆண்டிற்கு ரூ.40 கோடி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், காவல் துறை அதிகாரிகள், சுகாதாரதுறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறையினருக்கு லஞ்சமாக கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குட்கா மறைமுகமாக அனுமதியளிக்கப்பட்டதில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. குட்காவை சாப்பிடுவதால் உடல்நலம் கெடும் என்றும் தெரிந்தும், தடை செய்யப்பட்ட பொருளுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது தமிழக முதல்வர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

ஜிஎஸ்டி வரி

ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலதரப்பட்டவரும் பாதிக்கப்படுவார்கள். ஜிஎஸ்டியால் ஏற்கனவே வரிவிலக்கு பட்டியலில் இருந்த 59 பொருட்களுக்கு விரி விதிக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கு 14 சதவீதம் இருந்த வரி 28 சதமாக உயர்த்தி உள்ளனர். இந்த முறையினால் மருந்து, பட்டாசு, ஜவுளி தொழில், திரைப்படத் தொழில் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்படுவார்கள். சிறு வணிகம் நடத்துகிறவர்கள் இன்னும் தயாராவதற்குள்ளாகவே அமல்படுத்துவது சரியல்ல. எனவே அமல்படுத்துவதற்கு கால அவகாசம் அளிப்பதோடு, வரியை பெருமளவு குறைக்க வேண்டும் என்றார்.

என்எல்சியில் பழுப்பு நிலக்கரியை அதிக அளவிற்கு வெட்டி எடுத்து சேமித்து வைப்பதால் 2-வது முறையாக தீவிபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் நிலக்கரி எரிந்து நட்டம் எற்படுள்ளது.  தேவைக்கு அதிகமாக சேமித்து வைப்பதால் ஊழலும், முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளதை வழிமொழிகிறேன்.

பொதுத்துறை

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களான சேலம் உருக்கு ஆலை, எண்ணூர் காமராஜர் துறைமுகம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஆகியவற்றை தனியார்மயமாக்கும் மோசமான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பாதுகாப்பு சம்மந்தபட்ட துறைகளை தனியார் மயமாக்கக்கூடாது. எண்ணூர் துறைமுகம் சென்னை துறைமுகத்தால் 2 ஆயிரம் ஏக்கர் இடம் கையகப்படுத்தி, பணம் முதலீடு செய்யப்பட்ட துறைமுகமாகும். எனவே, மத்திய அரசு தனது முடிவினை மறுபரிசிலனை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற பல வருமான வரித்துறை சோதனையில் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்காமல் அதில் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

நீட் தேர்வு

நீட் தேர்வினால் தமிழகம் பாதித்துள்ளது. எனினும் இத்தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இது குடியரசுத்தலைவரின் செயலர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவினர் அவர்களுக்குள் சண்டை போட்டுக்கொள்கிற மாதிரி தெரிந்தாலும் மூன்று அணியினரும் போட்டி போட்டுக் கொண்டு குடியரசு தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கின்றனர். தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக பல முடிவுகளை மத்திய அரசு எடுக்கும் போது அதனை தடுக்கவோ, எதிர்க்கவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.16,900 கோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுப்பெற வேண்டும் என்றார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்புராயன், எஸ்.திருஅரசு ஆகியோர் உடனிருந்தனர்.

Check Also

திருவண்ணாலை: சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக

திருவண்ணாலையில் செயல்பட்ட  சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது  உரிய நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் திருவண்ணாமலையில் செயல்பட்டு ...