கூடன்குளத்தில் 3,4வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் துவக்கம் சிபிஐ(எம்) திருநெல்வேலி மாவட்டக்குழு கண்டனம்

கூடன்குளத்தில் 3வது 4வது அணு உலைகள் அமைக்கும் பணி மார்ச்சில் தொடங்கப்பட உள்ளது என அணுமின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ரூ 39,746 கோடி செலவில் 3வது, 4வது அணு உலைகள் நிறுவப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணு உலை பூங்காக்களை அமைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.

இது மக்களின் பாதுகாப்பையும், வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும். இந்தியாவில் 2020க்குள் 40,000 மெகாவாட் திறன் உள்ள அணு உலைகளை இறக்குமதி செய்ய வேண்டுமென ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவெடுத்திருந்தது. அமெரிக்காவிலிருந்து 10,000 மெகாவாட் திறன்கொண்ட அணு உலைகள் வாங்க ஒத்துக்கொண்டதோடு, எங்கும் சோதித்து பார்க்காத, மிக அதிக விலையுள்ள பிரெஞ்சு அணு உலைகளை ஜெய்தாபூரில் நிறுவவும் முடிவெடுத்துள்ளது. அதன்படி கூடன்குளத்தில் தற்போதுள்ள இரண்டு அணு உலைகளுடன், மேலும் 4 அணு உலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கூடன்குளத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 2000 மெகாவாட் திறனுள்ள அணு உலைகளுக்கு ரூ 14,000 கோடிதான் செலவழிக்கப்பட்டது. தற்போது ஒப்பந்தம் ஆகவுள்ள 2 அணு உலைகளுக்கு ரூ.40,000 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. இது உற்பத்தி செலவை அதிகரித்து, மின்சாரத்தின் விலை உயர்வதற்கும் வழிவகுக்கும்.

புகுஷிமாவில் பல அணு உலைகளை ஒரே இடத்தில் நிறுவி அணுசக்தி பூங்காக்களை உருவாக்கியது, விபத்து நடந்த போது பாதிப்புகளை அதிகரித்தது என்பதால் இத்தகைய பூங்காக்களை இந்தியாவில் எங்கும் நிறுவக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபட கூறுகிறது. எனவே கூடன்குளத்தில் 3வது, 4வது அணு உலை நிறுவுவதையும், 6வரை நிறுவ முடிவெடுத்திருப்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி முழுமையாக எதிர்க்கிறது.

கூடன்குளத்தில் நிறுவப்பட்ட முதல் 2 உலைகள் 20 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட ஒப்பந்தத்தின் பகுதி என்பதும், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் இந்திய அணுசக்தி பயன்பாட்டுக்கு தடை விதித்திருந்த காலத்தில் அதை எதிர்கொள்ள ரஷ்யாவுடன் உருவான ஒப்பந்தம் என்பதும் அவற்றை வித்தியாசப்படுத்துகிறது. ஆனால், 2011 புகுஷிமா விபத்தின் படிப்பினையாக அனைத்து அணு மின்நிலையங்களிலும் குறிப்பாக கூடன்குளத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சுயேட்சையான சோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்ய வேண்டும். இந்நிலையில் அடுத்த 2 உலைகளுக்கு அரசு முயற்சிப்பது மக்கள் நலனைவிட அமெரிக்காவிற்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்தான் மத்திய அரசு தீர்மானமாய் இருப்பது தெளிவாகிறது. இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளை பயன்படுத்துவது அடிப்படையில் அதிக செலவு பிடிக்க கூடியது. எரிசக்தி பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்ககூடியது. இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளைக் கொண்டு அணு மின் நிலைய பூங்காக்களை நிறுவும் திட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.

அன்புடன்

(கே.ஜி.பாஸ்கரன்)

மாவட்டச்செயலாளர்

Check Also

சிபிஐ(எம்) ஊழியர் மீது கொலை வெறித் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர் மீது பட்டப்பகலில் உள்ளூர் எதிரிகளுடன் சேர்ந்து கூலிப்படையினரால் கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ...