கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்படும் என்று திட்டத்தை உடனே துவக்கு

 

04.07.2017

பெறுநர்

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை – 600 009.

 

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:-     1. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மாவட்டம் குமாரமங்கலம்நாகப்பட்டினம் மாவட்டம் ஆதனூர் இடையில் கதவணைக்கட்ட 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டத்தையும்;

  1. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கேஜெயங்கொண்டபட்டினம் கடலூர் மாவட்ட அருகில் உப்பு நீர் உள்புகாமல் தடுத்திட மேலும் ஒரு கதவணை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக:

பார்வை:          எனது மனு 25.02.2016

 

  1. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய கதவணை கட்டி கொள்ளிடம் ஆற்றின் ஊற்று நீரை கடலூர் மாவட்டம், சிதம்பரம் கிள்ளை பகுதிக்கு பாசனத்திற்கும் குடிநீர் வழிக்கும் திருப்பி விட வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் 50 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையாகும்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்து வற்புறுத்தியதுடன் மாண்புமிகு. தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் மனு அளித்து நான் வற்புறுத்தி வந்ததன் விளைவாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மாவட்டம் குமாரமங்கலம் – நாகை மாவட்டம் ஆதனூர் கிராமங்களுக்கிடையில் ரூ. 400 கோடி மதிப்பிலான கதவணை கட்டப்படும் எனவும், இவ்வணையில் சேமிக்கப்படும் நீர் வடக்குராஜன் வாய்க்கால் மூலம் சிதம்பரம் கிள்ளை பகுதிகளுக்கும், தெற்கு ராஜன் வாய்க்கால் மூலம் நாகை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்திற்கும் பாசன வசதி கிடைக்கும் எனவும் 04.08.2014 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

இதற்கான திட்டப்பணிகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு நிதிஒதுக்கீட்டிற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திட்டம் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இத்திட்டம் நிறைவேறுவதன் மூலம் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் வசதி கிடைப்பதுடன் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு அதன் மூலம் குழாய் கிணற்று பாசனத்தை நம்பியுள்ள ஆறு வட்டங்களுக்கு தொடர்ச்சியாக நீர் கிடைக்க வழி ஏற்படும்.

எனவே மாண்புமிகு. முதல்வர் அவர்கள் இத்திட்டத்திற்கு நிதிஒதுக்கீடு செய்து திட்டப்பணிகளை உடனடியாக துவங்கிட வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

 

  1. கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உட்புகுந்து கடற்கரையிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரம் வரை 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் விவசாயம், பாசனம் மற்றும் நிலத்தடி நீர் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் இரு கரைப்பகுதிகளிலும் உள்ள கிராமங்கள் படிப்படியாக அழியும் நிலை உருவாகி வருகிறது. இங்கு வாழும் சுமார் 2 லட்சம் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியுறுகின்றனர். நிலத்தடி நீர் உப்புநீராக மாறிவிட்ட சூழ்நிலையில் விவசாயத்தையும் தொடர முடியாமல் மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

எனவே, கொள்ளிடம் ஆற்றில் முகத்துவாரத்தையொட்டி ஜெயங்கொண்டபட்டினத்திற்கு அருகில் ஆற்றின் குறுக்கே கதவணை (தடுப்பணை அல்ல) கட்டி உப்புநீர் உட்புகாமலும் தடுத்திட திட்டப்பணிகளை தயாரிக்க உத்தரவிட்டு அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

 

இப்படிக்கு,

தங்கள் அன்புள்ள,

/ஒப்பம்

(கே. பாலகிருஷ்ணன் Ex. MLA.,)

மத்தியக்குழு உறுப்பினர் – சிபிஐ (எம்)

Check Also

பாஜகவினரின் நெருக்கடியை புறந்தள்ளி, ஊடகவியலாளர்களை பாதுகாக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

23.04.2018 பெறுநர் உயர்திரு ஆசிரியர் அவர்கள், நாளிதழ் / தொலைக்காட்சி, சென்னை. அன்புடையீர் வணக்கம், ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாக ஊடகங்கள் ...