சமூக வலைத்தளத்தில் அவமானப்படுத்துதல், மிரட்டுதல், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை இயக்குநருக்கு சிபிஎம் செயலாளர் எழுதியுள்ள கடிதம் ..

1.08.2017

பெறுநர்:

உயர்திரு. காவல்துறை இயக்குநர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு,

சென்னை – 600 004.

வணக்கம்.

பொருள்:-       சமூக வலைத்தளத்தில் அவமானப்படுத்துதல், மிரட்டுதல், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோருதல் சம்பந்தமாக…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களில் ஒருவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலாளருமான தோழர் எஸ். கருணா, ….. என்ற முகவரியில் வசித்து வருகிறார். திருவண்ணாமலையில் உள்ள பவளக்குன்று மலையை 2007 மற்றும் 2017 ம் ஆண்டு நித்தியானந்தா என்கிற தன்னை சாமியார் என்று அழைத்துக் கொள்ளும் நபர், அவரது சீடர்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றார். இந்த முயற்சியை  மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களும், பொதுமக்களும் தொடர்ச்சியாக போராடி முறியடித்தனர். இந்தப் போராட்டங்களில் கருணா முக்கிய பங்காற்றினார்.

இதனால் வன்மம் கொண்ட நித்தியானந்தாவின் சீடர்கள் என்று கூறிக் கொள்வோர் முகநூல் பக்கங்களில் கருணாவையும், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரையும், எங்கள் கட்சியின் தோழர்களையும் மிகவும் கேவலமான முறையில் சித்தரித்து எழுத்து மற்றும் வீடியோவாக முகநூலில்  பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பதிவுகளில் கருணாவை கொன்று விடுவோம் என்று பொருள்படும் வகையில் பதிவிட்டுள்ளனர். இதை தொடர்ச்சியாகவும் செய்து வருகின்றனர். நித்தியானந்தா மற்றும் அவரது கும்பலின் கடந்தகால செயல்பாடுகளை கருத்தில் கொண்டால் இத்தகைய செயல்களுக்கு அவர்கள் அஞ்சாதவர்கள் என புரிந்து கொள்ள முடியும். அரசியல் பின்புலம், அதிகாரிகளின் ஆதரவு, பணபலம் அதிகமாக உள்ளவர் நித்தியானந்தா. அதேபோன்று எவ்வித குற்றச்செயல்களுக்கும் அஞ்சாதவர்கள் என்பது அவர்களின் வீடியோ பதிவிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

எனவே, இத்தகைய அவதூறு மற்றும் கொலை மிரட்டல் வீடியோக்களையும், பதிவுகளையும் உடனடியாக நிறுத்தவும், கருணா மற்றும்  அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவும், அவதூறான,  நாகரிகமற்ற மிரட்டல் பதிவிட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய  வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

 

(ஜி.ராமகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சித் தலைவர்கள் தமிழக ஆளுநருடன் சந்திப்பு

சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சித்  தலைவர்கள் தமிழக ஆளுநருடன் சந்திப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...