சிபிஎம் மாநிலக்குழு அலுவலகம் முன் கட்சி கொடியை எரித்து ஏபிவிபி அராஜகம் – சிபிஐ(எம்) கண்டனம்

ஆர்எஸ்எஸ் தலைமையில் செயல்படக்கூடிய பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 11 பேர் செவ்வாயன்று (அக்.31) மாலை  6 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியையும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

நாடு முழுவதும் வகுப்புவாத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியோடு மக்களை திரட்டி எதிர்த்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக, சங் பரிவார அமைப்புகள் இதுபோன்ற ஆத்திரமூட்டும் வன்முறையில் இறங்கியுள்ளனர்.

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய வன்முறை அரசியலை அம்மாநில மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இதனால் சங்பரிவார அமைப்புகள் மேலும் ஆத்திரமடைந்துள்ளன.

சங்பரிவார அமைப்புகளின் வன்முறையை கண்டிப்பதோடு, அராஜகமான முறையில் கட்சி அலுவலகம் முன்பு வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

சங்பரிவாரத்தின் இத்தகைய ஆத்திரமூட்டும் வன்முறையை எதிர்த்து நவ.1 அன்று காலை 10 மணி அளவில் வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Check Also

மாற்றுக் கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாத சங் பரிவாரங்களின் அடாவடி செயலுக்கு சிபிஐ(எம்) கண்டனம்|நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சத்தீஸ்கர் மாநில பாஜக அரசின் முதல்வர் ராமன்சிங் தனது மருமகளின் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையிலிருந்த நோயாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோரை அலைக்கழித்தும் ...