சிபிஐ(எம்)ன் மாநிலக்குழுக் கூட்டத் தீர்மானம் (03.09.2013)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (03.09.13) திருச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம் 1 :
ஐ.நா. மனித உரிமை ஆணைய தீர்மானத்தை அமல்படுத்த இலங்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
இலங்கை அரசாங்கம் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எவ்வித முயற்சியையும் மேற்கொள்ள மறுத்து வருகிறது. அரசியல் தீர்வை முன்வைப்பதற்குப் பதிலாக அதை மறுதலிக்கும் வகையில் 13-வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையத்தின் கமிஷனர் நவநீதம் பிள்ளை இலங்கை அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது என்று குறிப்பிட்டடிருக்கிறார். போரின் போதும், அதன் பின்னரும், காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை நேர்மையாகவும் நடக்கவில்லை, விரைவாகவும் நடக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். மக்கள் அவநம்பிக்கை மற்றும் நிம்மதியற்ற வாழ்க்கையை  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்படுவதற்கு மாறாக, இராணுவம் தங்குவதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன என்றும் மதவழிச் சிறுபான்மையோர் மற்றும் அவர்களது வழிபாட்டுதலங்கள் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது என்றும் கூறியுள்ளார். இவ்வாண்டு மார்ச்சில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக இலங்கை அரசாங்கம் நடந்து கொள்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இலங்கை அரசாங்கத்தின் இந்தப்போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றிய தீர்மானத்தை அமலாக்கிட இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
 

தீர்மானம் 2 :
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் :
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில் 41 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. டீசல் விலைக் கட்டுப்பாட்டை நீக்கிக் கொண்ட பிறகு தொடர்ச்சியாக மாதம் தோறும் 50 பைசா உயர்த்தி வருகிறது. இந்த நான்காண்டு காலத்தில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.44.63 -லிருந்து ரூ.77.48-ஆக ஏறத்தாழ 33 ரூபாய் (75 சதவிகிதம்) உயர்த்தப்பட்டுள்ளது. டீசலின் விலை ரூ.30.86-லிருந்து ரூ.51.97-ஆக (68 சதம்) உயர்த்தப்பட்டுள்ளது. உணவுபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் அதை மேலும் மோசமாக்கும் வகையில் இந்த விலை உயர்வு அமைந்துள்ளது. மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மத்திய அரசாங்கம் இந்த விலை உயர்வை கைவிட வேண்டும் எனவும், பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்யும் கம்பெனிகள் விலையை தீர்மானிக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 :
3. சில மாவட்டங்களில் தொடர்ந்து நீடித்து வரும் 144 தடை உத்தரவை விலக்குக:

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தர்மபுரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2013, ஏப்ரல் 25 ஆம் தேதி மரக்காணத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதலையொட்டி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்து நெல்லை மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில அசாதாரண சூழ்நிலைகளில் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமானவையே. ஆனால், 4 மாதங்களுக்கு மேலாக சில மாவட்டங்களில் 144 தடை உத்தரவை கால வரம்பின்றி நீட்டிப்பதும், அதன்படி ஜனநாயக இயக்கங்களை தடுப்பதும் ஜனநாயகப்பூர்வமான அணுகுமுறை ஆகாது. 144 தடை உத்தரவை காரணம் காட்டி  மக்கள் பிரச்சனைகள் மீதான ஜனநாயகப்பூர்வ இயக்கங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, உடனடியாக தர்மபுரி, விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் தொடர்ந்து நடைமுறையிலுள்ள 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
 

Check Also

நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்! – யூசுப் தாரிகாமி

பாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்! - யூசுப் தாரிகாமி

Leave a Reply