சிபிஐ(எம்) செயற்குழுத் தீர்மானம் (11.12.2013)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் (டிசம்பர் 11, 2013) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ஏ,லாசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா விடுதலைப் போராட்ட வீரர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு;

தமிழகத்தில் அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவடையாத நிலையில் அவசர சிகிச்சை தேவைப்படுவோர்க்கு உரிய சான்றிதழ்கள் அளித்து சிகிச்சை பெறும் வசதி இப்போது நடைமுறையில் உள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை இல்லாதோருக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படமாட்டாது என்று சுகாதாரத்திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதனால் இதுவரை காப்பீட்டு அடையாள அட்டை பெறாத ஏழை எளிய மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே, அடையாள அட்டை பெறுவதற்கான காலத்தை நீட்டிக்க வேண்டுமென்றும் இடைக்காலத்தில் நடைமுறையில் உள்ள தற்போதைய சான்று கொடுத்து சிகிச்சை பெறும் முறை தொடர வேண்டும் என்றும் காப்பீட்டு நிறுவனமும் தமிழக அரசும் விரிவான பிரச்சாரம் மற்றும் நிர்வாக ஏற்பாடுகளின் மூலம் தகுதியுள்ள அனைவரும் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை பெறுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு  தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட ...

Leave a Reply