சிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானம் (31.10.2013)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் (அக்டோபர் 30, 2013) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு தோழர்கள் கலந்து கொண்டனர்.

தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் மயிலாப்பூர்,  மந்தைவெளி  தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதனால் தபால் நிலையங்களில் சில பகுதிகள் தீப்பிடித்து சேதமடைந்துள்ளன என செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த வன்முறைச் செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. எத்தகைய கருத்தாக இருந்தாலும், அதை ஜனநாயக முறையில் வெளிப்படுத்தலாம். முன்வைக்கப்படும் கருத்தினை வலியுறுத்தி, ஜனநாயக முறையில் இயக்கங்கள், போராட்டங்கள் நடத்தலாம். மாறாக, வன்முறை செயல்களில் இறங்குவது ஏற்கத்தக்கது அல்ல. சரியான அணுகுமுறையும் அல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக் காட்டுகிறது.

பள்ளிக் கல்வியை வணிகமயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு :

மத்திய அரசு பள்ளிக்கல்வியை வணிகமயமாக்கும் அரசு- தனியார் கூட்டு (Public Private Partnership) திட்டத்தின்படி பின்தங்கிய பகுதிகளில் மாதிரிப் பள்ளிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே,  தமிழகத்தில் தனியார் பங்களிப்பு இல்லாமல் மாநில அரசே மாதிரிப் பள்ளிகளை பின்தங்கிய பகுதிகளில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பின்தங்கிய நிலைமை இல்லாத பகுதிகளில் மாதிரிப் பள்ளிகளை தொடங்க விண்ணப்பிக்குமாறு தனியாரைக் கோரும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையின்படி, மத்திய கல்வி வாரியத்தின் (CBSE) அனுமதியோடு 356 பள்ளிகள் தொடங்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான நிலம் ஏற்பாடு செய்து கொடுக்கும் பொறுப்பு மாநில அரசைச் சார்ந்ததாகும்.

இந்த அறிவிக்கை மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசே நேரடியாக தனியார்- அரசு கூட்டு என்ற பெயரில் பள்ளிக் கல்வியை தனியார் மயமாக்கும், வணிக மயமாக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கையாகும் – மாநில அரசின் உரிமையை புறக்கணிக்கும் அத்துமீறல் நடவடிக்கையாகும். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, இந்த அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தமிழக அரசு, மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தமிழகத்தில் மத்திய அரசே நேரடியாக மாதிரிப் பள்ளிகளை நடத்த தனியாருக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், தேவைப்படும் பகுதிகளில் தமிழக அரசே மாதிரிப் பள்ளிகளை திறந்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
 

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply