சென்னை பெருநகர மக்களின் கோரிக்கைகள் குறித்த – தீர்மானம்

தீர்மானம்:3

சென்னைப் பெருநகரம் உலக தனியார்மய போட்டியில் 37 வது இடத்தில் உள்ளது. 2011 ம் ஆண்டில் 176 .கி.மீ. பரப்பளவு கொண்ட நகரம் தற்போது 426 .கி.மீ. ஆக விரிவடைந்துள்ளது. சென்னையை சுற்றி 19 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. நகரை நோக்கி வேலை தேடி வருவோர் எண்ணிக்கை 24 சதம் அதிகரித்துள்ளது. வளர்ச்சியின் அடையாளமாக முன்வைக்கப்படும் நகரம், சமமின்மைக்கும், நகர்ப்புற ஏழைகளின் வறுமைக்கும் தலைநகரமாக திகழ்கிறது.

குடியிருப்பு, குடிநீர், சுகாதாரம், மருத்துவம், கல்வி, வேலை என அடிப்படை தேவைகள் அரிதானதாகவும், பெரும் செலவினமாகவும் மாறிவிட்டது.

சென்னை பெருநகரின் ஆவணமற்ற குடியிருப்புகள் 50 சதத்திற்கும் மேல் உள்ளது. குடிசைப்பகுதி, நீர் வழிக் கரையோர பகுதிகளில் வாழும் 30 சதவீத மக்களை பற்றி அக்கறை கொள்ள மறுக்கின்றனர். வளர்ச்சி, அழகு படுத்துதல், உலகத்தரம் என்ற பெயரால் 40 கி.மீ.தூரத்திற்கு அப்பால் விரட்டியடிக்கப்படுகின்றனர். குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு கிரயபத்திரம் வழங்க மறுப்பது, கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு வகைமாற்றம் செய்து நிலத்தை வழங்க மறுப்பது, குடிமனைப் பட்டா வழங்காமல் இருப்பது போன்ற காரணங்களால் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பெருநகர வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் குடிநீர் வசதிகள் இல்லை. சென்னையை சுற்றியுள்ள நிலத்தடி நீர் அனைத்தும் தனியார் குடிநீர் நிறுவனங்களிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. குடிநீரை வணிகமயமாக்கி உள்ளனர். குடிநீர் வழங்குவதிலிருந்து அரசு படிப்படியாக தன்னை விடுவித்துக் கொண்டு வணிக நிறுவனமாக மாறி வருகின்றது. குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது அரிதாகிவிட்டது. சாத்தியமற்றது என்ற கருத்தும் பரப்பப்படுகிறது. சென்னை புறநகர் பகுதியில் குடிநீர் திட்டத்திற்கும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கும் அரசு தனியார் பங்களிப்பு (Private Public Partnership)என்ற பெயரில் பெரும் கட்டணக் கொள்ளை அடிக்கின்றனர்.

சென்னை மக்களின் தேவைக்கு, வளர்ச்சிக்கு ஏற்றவகையில் மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. இருப்பினும் பெரும்பாலான மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் உள்ளனர். 18 மருத்துவமனைகள், 75 மாநகராட்சி சுகாதார மையங்கள் உள்ளன. இவை யாவும் நகரின் மையப் பகுதியில் தான் அதிகமாக உள்ளது. விரிவாக்கத்திற்கு ஏற்ற வகையில் அமையவில்லை.

பொது சுகாதாரம், கட்டமைப்பு சீர்குலைந்து வருகிறது. இவற்றை மேம்படுத்த மாநகராட்சியும், அரசும் எடுக்கிற முயற்சிகள் ஆமை வேகத்தில் உள்ளது. சில ஆயிரம் கோடி வரை செலவு செய்து கட்டப்பட்ட மழைநீர் வடிகால் திட்டம் தோல்வியடைந்துள்ளது. பாதாள சாக்கடை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படாததால், குடிநீருடன் கழிவு நீர் கலப்பதும், மழைக்காலங்களில் சாலைகளிலும், தாழ்வான வீடுகளுக்குள்ளும் சென்று நோய் பரப்புகிறது. திடக்கழிவுகளை அகற்றுவதில்லை. திட்டங்கள் அனைத்தும் அறிவிப்புகளாக உள்ளன. தனியார் மயம், ஊழலிலும், தோல்வியிலும் முடிந்துள்ளது. கொடுங்கையூர், வள்ளுவர்கோட்டம், அம்பேத்கர் குப்பம், வளசரவாக்கம், பெருங்குடி என குப்பை மலைகள் பொது சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. மேற்கண்ட பிரச்சனைகளால் சுற்றுச் சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கல்வியில், தலைநகரமான சென்னையில் பள்ளிக்கல்வி குறிப்பாக அரசு பள்ளிக் கல்வி சிதிலமடைந்து வருகிறது. நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கம் அரசுப் பள்ளிகளை நம்பியேயுள்ளனர். தரம் உயர்த்தப்படாததோடு, கழிப்பிடம் முதல் கம்யூட்டர் சென்டர் வரை பராமரிப்பின்றி உள்ளது. தரமான ஆசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் உரிய காலத்தில் நியமிக்கப்படுவதில்லை. இதனால் மாணவர் வருகை குறைந்து வருவதை காரணம் காட்டி பள்ளிகள் மூடப்படுவது தொடர்கிறது.

சென்னை மற்றும் புறநகர் மக்கள் சந்திக்கும் மற்றொரு அடிப்படை பிரச்சனை போக்குவரத்து பிரச்சனை ஆகும். பொதுப் போக்குவரத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை போக்குவரத்து வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடிப்பதுமில்லை.

சென்னை பெருநகர மக்கள் அடிப்படை வசதிகள் அற்றவர்களாக, பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ளனர். தங்களது பிரச்சனைகளை வெளிப்படுத்த, கோரிக்கைகளை கூட்டாக முன்வைக்க கூட்டங்கள், இயக்கங்கள் நடத்துவதற்கு அரசு நிர்வாகம் அனுமதிப்பது இல்லை. மூன்று இடங்களில் மட்டும் தான் போராட்டம் நடத்த வேண்டும் என்பது புதிய அடக்குமுறை வடிவமாகும்.

எனவே, சென்னை மற்றும் புறநகர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.

  1. சென்னையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

  2. குடிசைப்பகுதி மக்களுக்கு வீட்டுவசதி, குடிசைமாற்று வாரிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு கிரயப்பத்திரம், கோயில் நிலங்களை வகைமாற்றம் செய்து கொடுத்திடவும், புறநகர பகுதியில் குடிமனை பட்டா வழங்கிடவும் வேண்டும்.

  3. பாதுகாக்கப்பட்ட குடிநீர், குழாய்கள் மூலம் வழங்குவதை உத்திரவாதப்படுத்த வேண்டும். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளுக்கும் குடிநீர், குழாய்கள் மூலம் வழங்க வேண்டும்.

  4. மருத்துவமனை வசதிகளை அதிகப்படுத்தி விரிவுபடுத்திட வேண்டும். கத்திவாக்கம் மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர் என விரிந்த பகுதிகளுக்கு மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் மண்டலத்திற்கு ஒரு பொது மருத்துவமனையும், வட்டத்திற்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், போதிய மருத்துவர்களுடன் உருவாக்க வேண்டும்.

  5. பொது சுகாதாரத்தை மேம்படுத்த கூடிய வகையில் மழைநீர் வடிகால்வாய், பாதாள சாக்கடை சீரமைத்திட வேண்டும். திடக்கழிவை, நவீன முறையில் கையாண்டு பொது சுகாதாரத்தினை பாதுகாக்க வேண்டும்.

  6. பெரும்பாலான சாலைகள், நடைபாதைகள் இல்லாமலேயே அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சாலைகளிலும் நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும்.

  7. பெருநகரத்தில் மூடிய மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை ஈர்க்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளையும், தரத்தையும் உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவாக்கப் பகுதிகளுக்கு புதிய பள்ளிகளை அரசு துவக்கிட வேண்டும்.

  8. சென்னை மற்றும் புறநர் பகுதியில் மக்களின் கருத்து சுதந்திரம், பாதிக்கப்படும் மக்களின் கூட்டு முறையீட்டிற்கும், போராட்டத்திற்கும், பொதுக்கூட்டத்திற்கும் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்கி விட்டு, மண்டல அளவிலும்போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். சென்னையில் பெரும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கென தனி இடங்களை அரசும், மாநகராட்சி ஒதுக்கித் தர வேண்டும்.

  9. மக்களின் அடிப்படை தேவைகள், பாதாளச் சாக்கடை, குடிநீர், வடிகால் போன்றவற்றில் (பிபிபி) திட்டத்தின் மூலம் அமலாக்குவதற்கு பதிலாக அடிப்படை வசதிகளை அரசு திட்டத்தின் மூலமாக நிறைவேற்ற வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை மாநில அரசும், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் நிறைவேற்றித் தர வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

முன்மொழிந்தவர்: எல். சுந்தரராஜன்

வழிமொழிந்தவர்: ஜி. செல்வா

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...