தமிழகத்தில் 28-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம்: சிபிஐ(எம்) ஆதரவு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் இரண்டு தடுப்பணைகளை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவெடுத்தபோது தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வன்மையாக கண்டித்தன. தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இத்தனைக்கும் பிறகு சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கர்நாடக அரசின் மாநில பட்ஜெட்டில் தடுப்பணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிக்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளது. காவிரி நதிநீர் பிரச்சனையில் எந்த மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்றாலும் மேலாண்மை வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும். நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியாகி அரசிதழில் வெளியிட்ட பிறகும் இதுவரையில் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதை தொடர்ந்து கிடப்பில் போட்டு வருவதுடன், மேகதாதுவில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியையும் தடுக்கவில்லை. மேகதாதுவில் தடுப்பணை கட்டப்பட்டால் டெல்டா பிரதேசம் மட்டுமல்ல தமிழகமே கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பணை கட்ட முனைவதை எதிர்த்து பல விவசாயிகள் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பல கட்டப்போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருவதன் ஒரு பகுதியாக இம்மாதம் 28ந் தேதி மாநிலம் தழுவிய முழுஅடைப்புக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையினை கண்டித்தும், அம்முயற்சிகளை கர்நாடக அரசு கைவிட வேண்டுமென வற்புறுத்தியும்; காவிரி மேம்பாட்டு ஆணையத்தை தாமதிக்காமல் உடன் அமைத்திடவும், தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்தவும் மத்திய பாஜக அரசை வற்புறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மேற்கண்ட முழுஅடைப்பு போராட்டத்திற்கு தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.