தமிழக அரசு‍ அறிவித்துள்​ள கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நவ. 28 அன்று‍ தமிழகம் முழுவதும் மறியல்

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண உயர்வுகளை திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் 28-ல் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்!

தமிழக அமைச்சரவையின் முடிவாக, கடந்த வியாழன்று தமிழக முதல்வர் பால், பேருந்து கட்டணங்களை உயர்த்தி அறிவித்ததோடு மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஆணையத்துக்கு பரிந்துரையும் செய்துள்ளார். மாநில அரசின் இந்த கட்டண உயர்வை அனைத்துப் பகுதி மக்களும் எதிர்த்து வருகின்றனர். அனைத்துக் கட்சிகளும் இந்தக் கட்டண உயர்வை கண்டித்தன.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் மக்கள் விரோதக் கொள்கையை கடைபிடித்த, ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றிட வேண்டுமென்ற நோக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க-வுடன் தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எண்ணினார்கள். ஆனால் வாக்களித்த மக்கள் மீது இப்போது அஇஅதிமுக அரசு கட்டண உயர்வு என்ற பெருஞ்சுமையை ஏற்றி உள்ளது.

20.11.2011 அன்று தமிழக முதல்வர் அவர்களின் பத்திரிகை செய்தியில் கூறியுள்ளது போல்,  மக்களுடைய அத்தியாவசியத் தேவையான பால், பேருந்து, மற்றும் மின்கட்டணத்தை உயர்த்தலாம் என்ற ஆலோசனையை அஇஅதிமுகவிற்கு ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சி வழங்கவில்லை. தேர்தல் முடிவு வெளியான உடன் 15.5.2011 அன்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்து அறிவித்தது. இன்று மக்கள் தலையில் பெரும் சுமையை ஏற்றியிருக்கிற பின்னணியில், இந்த பால்விலை உயர்வையும், பேருந்து கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது; உத்தேச மின் கட்டண உயர்வையும் நிறுத்துமாறு கோருகிறது.

அனைத்துக் கட்சியினரின் கண்டனத்தைக் கண்டு கொள்ளாமலும், பொது மக்களின் ஏகோபித்த கோபத்தைப் பொருட்படுத்தாமலும் அ.இ.அ.தி.மு.க. அரசு கட்டண உயர்வுகளை அமல்படுத்தியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசினுடைய தவறான கொள்கையால் ஏற்பட்ட விலைவாசி உயர்வால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் மீது மேலும் தமிழக அரசு பெரும் பாரத்தை சுமத்தியுள்ளது. உயர்த்திய கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மாநில அரசை வலியுறுத்தி 28.11.2011 அன்று மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தமிழகமெங்கும் மறியல் போராட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தீர்மானித்துள்ளது.

நடைபெறவுள்ள இந்த மறியல் போராட்டத்திற்கு அனைத்துப் பகுதி மக்களும் பேராதரவு தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகிறது.

 

Check Also

மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறுக!

கடந்த புதன்கிழமை (13-2-2019) மதியம் முதல் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வர் திரு.நாராயணசாமி உட்பட அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற ...

Leave a Reply