தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களை புறக்கணிக்கும் பாஜகவின் மோடி அரசை கண்டித்து தீர்மானம்

பாஜகவின் மோடி அரசு பதவி ஏற்றபின் புதிய ரெயில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப் போவதில்லை என்றும், ஏற்கனவே ஒப்புதல் அளித்து நிதி நிலை அறிக்கைகளில் சேர்க்கப்பட்ட திட்டங்களை முடிக்கவே முன்னுரிமை தரப்படும் என்றும் அறிவித்தது.

நாடு முழுவதும் மக்கள் கோரிக்கைகளை ஏற்று பல புதிய ரெயில் பாதை, அகலப்பாதை, ரெட்டைப் பாதை திட்டங்களை ஆய்வு செய்து திட்ட மதிப்பு உட்பட முடிவு செய்யப்பட்ட பல திட்டங்களை கிடப்பில் போட்டு 2014 செப்டம்பர் 24 அன்று  அறிவிப்பை வெளியிட்டது.

தமிழகத்தைப் பொறுத்த வரை அப்படிப்பட்ட  24 திட்டங்களை கைவிடும் முடிவை அது அறிவித்துள்ளது. கீழ்க்காணும் புதிய ரெயில்பாதை திட்டங்கள் கைவிடப்படுகின்றன.

 • சென்னையிலிருந்து போரூர் வழியாக ஸ்ரீபெரும்புதூர்
 • ஆவடி – ஸ்ரீபெரும்புதூர் ராமனாதபுரம் –  தனுஷ்கோடி
 • அரியலூர் – தஞ்சாவூர் திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி வழியாக கடலூர்
 • மயிலாடுதுறை – திருக்கடையூர் – தரங்கம்பாடி – திருநள்ளார் – காரைக்கால்
 • ஜோலார்பேட்டை  – ஓசூர் கிருஷ்ணகிரி தர்மபுரி இணைப்புடன்
 • சத்தியமங்கலம் – மேட்டூர் ஈரோடு – சத்தியமங்கலம்
 • சத்தியமங்கலம் – மங்களூர் மொரப்பூரிலிருந்து  தர்மபுரிக்கு மூக்காணுர் வழியாக
 • மதுரை – காரைக்குடிக்கு மேலூர் திருப்பத்தூர் வழியாக
 • திருமானூர் வலம்புரி வழியாக தஞ்சை – அரியலூர்
 • சென்னைக்கும் வில்லிவாக்கத்துக்கும் இடையே 5வது 6வது பாதை
 • வில்லிவாக்கம்  – காட்பாடி புதிய பாதை திண்டிவனம் – ஜோலார்பேட்டை
 • போடிநாயக்கனூர் – கோட்டயம் மதுரை – போடிநாயக்கனூர் – கோட்டயம்
 • ராமேஸ்வரம் – தனுஷ்கோடி காரைக்கால் – சீர்காழி
 • ராமநாதபுரம் வழியாக காரைக்குடி – தூத்துக்குடி
 • தூத்துக்குடி வழியாக ராமநாதபுரம் – கன்னியாகுமரி
 • சென்னை – கன்னியாகுமரி ரெட்டைப் பாதை திட்டம்

சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே மின்மயத்துடன் கூடிய ரெட்டைப் பாதை திட்டம்  மிக முக்கியமானதாகும்.  இதில் செங்கல்பட்டு வரை ரெட்டைப் பாதை உள்ளது.  செங்கல்பட்டு முதல் விழுப்புரம் வரை ரெட்டைப் பாதை முடியும் தருவாயில் உள்ளது. விழுப்புரம் முதல் திண்டுக்கல் வரை 273 கி.மீக்கு ரெட்டைப் பாதை வேலை ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.  ரூ 1300 கோடி திட்டத்தில் இன்னும் ரூ 700 கோடி தேவைப்படுகிறது. அது விரைந்து முடிக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

மதுரையிலிருந்து திருநெல்வேலி நாகர்கோயில் வழியாக கன்னியாகுமரிக்கும் நாகர்கோயிலிலிருந்து திருவனந்தபுரத்துக்கும் 245 கி.மீ தூரம் மின் மயத்துடன் கூடிய ரெட்டைப் பாதை போட கள ஆய்வு முடிந்து ரூ 1916 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  இந்தத் திட்டம் நிறைவேறினால் சென்னையிலிருந்து கன்யாகுமரிக்கும்  திருவனந்தபுரத்துக்கும்  ரெட்டைப் பாதை உருவாகி ஏராளமான   ரெயில் வண்டிகள் தாமதமின்றி ஓட வழி வகுக்கும்.

ஆனால் பாஜக அரசு இந்த திட்டத்தையும் புதிய திட்டமாக கருதுவதால் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.  நடைமுறையில் அதுவும் கிடப்பில் போடப்படும்.

நடப்பில் உள்ள திட்டங்கள்

பாஜக அரசு புதிய திட்டங்களை மேற்கொள்ள மாட்டோம்.  நடப்பில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிப்போம் என்று அறிவித்தாலும் தமிழகத்தின் நடப்பில் உள்ள  பல புதிய பாதை திட்டங்களையும் சில அகலப் பாதை, ரெட்டைப் பாதை திட்டங்களையும் கைவிடவும் சிலவற்றை மாநில அரசு நிதி அளித்தால்தான் மேற்கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.

 • ஈரோடு – பழனி புதிய பாதை, திண்டிவனம் செஞ்சி – திருவண்ணாமலை
 • திண்டிவனம் – வாலாஜாரோடு – நகரி புதிய பாதை திட்டத்தில் திண்டிவனம் – வாலாஜாரோடு பாதை
 • மதுரையிலிருந்து அருப்புக்கோட்டைக்கு தூத்துக்குடி வழியாக புதிய பாதையில் மீளவட்டான் – மேல் மருதூர் தவிர மற்றவை
 • சின்ன சேலம் – கள்ளக்குறிச்சி பாதை மன்னார்குடி –  பட்டுக் கோட்டை
 • தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை புதிய பாதை மதுரை  – போடிநாயக்கனூர் அகலப்பாதை

ஆகியவற்றை மாநில அரசு 50 சதம் தரவில்லை என்றால் கைவிட முடிவு செய்துள்ளது.  தாம்பரம் – செங்கல்பட்டு 3 வது பாதை திட்டமும் கைவிட முடிவு செய்துள்ளது.  இருகூர் போத்தனூர் ரெட்டைப் பாதை திட்டமும் கைவிடப்படுகிறது.

மாநில அரசின் மீது சுமையை ஏற்றிவிட்டு அது முடியாத போது மாநில அரசின் மீது பழிபோடும் திட்டமே இது என்று இம்மாநாடு சுட்டிக் காட்ட விரும்புகிறது.  இவ்வளவு பெரிய நாட்டின் ரெயில் வளர்ச்சித் திட்டங்களை ரெயில்வே துறை மட்டுமோ அல்லது மாநில அரசோ நிறைவேற்றுவது சாத்தியமல்ல.

மக்கள் சீன அரசு ரெயில்வே துறையில் ஆண்டு தோறும் 7 லட்சம் கோடி முதலீடு செய்வதைப்போல மத்திய அரசுதான் ரெயில் வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.   பல லட்சம் கோடி மத்திய அரசுக்கு வர வேண்டிய வருவாயை கார்ப்பரேட்டுகளுக்கு விட்டுக் கொடுக்கும் பாஜக அரசு, காங்கிரஸ் அரசைப் போலவே பணம் இல்லை என்ற காரணத்தைக் கூறி திட்டங்களை தட்டிக் கழிப்பதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

கறுப்புப் பணம் 28 லட்சம் கோடி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.  100 நாளில் அதைக் கொண்டு வந்து ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் தரப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த மோடி அரசு பணம் இல்லை என்று கூறும் காரணத்தை ஏற்க முடியாது.

எனவே மத்திய அரசு சாக்கு போக்குகளை கைவிட்டு ரெயில் வளர்ச்சியில் குறிப்பாக தமிழக ரெயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு வரும் ரெயில்வே நிதி நிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்திட இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. தமிழக அரசும், மாநிலத்தில் நிறைவேற்ற வேண்டிய ரெயில்வே திட்டங்களை மத்திய அரசிடம் வலுவாக வற்புறுத்த வேண்டுமென மாநில மாநாடு கேட்டுக் கொள்கிறது.

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...