தருமபுரி மாவட்டத்தில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு‍ விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் அமைத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு அப்பகுதி விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தாமலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும் அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் நேற்று (28.12.2011) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தொழிற்பேட்டை (சிப்காட்) அமைப்பதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. சிப்காட் அமைய உள்ள கிராமங்களைச் சார்ந்த மக்கள் தங்களது விளை நிலம் பறிக்கப்படும் என்ற அச்சத்துடன், பல கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்கு சிற்றூராட்சிகளில் சுமார் 2500 ஏக்கரில் சிப்காட் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதில் கணிசமான அளவில் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக, 1. ஜீவா நகர், 2. வெத்தலகாரன்கொட்டாய், 3. வெத்தலக்காரன் பள்ளம், 4. முண்டாஸ்கொரவடை, 5. தாளப்பள்ளம், 6. ஜாகிர், 7. தேவர் ஊத்துப்பள்ளம், 8. இந்திரா நகர், 9. இருளர் காலனி ஆகிய கிராமங்களில் பாதிப்பு ஏற்பட உள்ளது. கிணற்றுப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட நன்செய் பட்டா நிலம், புன்செய் பட்டா நிலம் உள்ளிட்ட 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதனை நம்பியுள்ள பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உள்ளது.

தொடர்ந்து தமிழகத்தில் விவசாயத்திற்கான நிலப்பரப்பு குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விளை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகள் நிறுத்தப்படல் வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அவசியமானது என்றே நாங்கள் கருதுகிறோம். ஆனால் இத்தகு தொழிற்பேட்டை விளைநிலங்களை கையகப்படுத்தாமல் அமைக்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. எனவே, இப்பகுதி விவசாயக் குடும்பங்களின் நலன் பாதிக்காத வகையில் சிப்காட் அமைத்திட மாவட்ட நிர்வாகத்தை தாங்கள் அறிவுறுத்துமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு, தங்களன்புள்ள, /ஒப்பம் (ஜி. ராமகிருஷ்ணன்) மாநிலச் செயலாளர்

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply