தலித் மக்கள் வீடுகளை இடித்த குற்றவாளிகளை கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பாப்பாங்குளம்  கிராமத்தில் சுமார் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். சிறுகுடி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தங்கராஜ் இப்பகுதி தலித் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை எனக் கருதி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். தனக்கு வாக்களிக்காத தலித் மக்களை வஞ்சம் தீர்க்க வேண்டுமென்கிற வன்மத்தோடும், வெறியோடும் 15.8.2013 சுதந்திர தினத்தன்று, தங்கராஜ் ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் தலித் மக்களின் 24 வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளார். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்திற்கும் பட்டா, மின் இணைப்பு உள்பட அனைத்து அரசு ஆவணங்களும் உள்ளன. மூன்று வீடுகள் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்டவை. தலித் மக்களின் வீடுகள் இடிக்கப்படும் போது, மானாமதுரை சரக காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருந்துள்ளனர். தட்டிக்கேட்ட கள்ளிவயல் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியனைக் காவல்துறையினர் தாக்கியதோடு, அவர் மீது பொய் வழக்குத் தொடுத்துள்ளனர். உள்ளாட்சி மன்றத் தேர்தல் குரோதத்துடனும் சாதி வெறியோடும் கூடிய இந்த கொடூரத் தாக்குதலில் சுமார் 1 கோடி ரூபாய் அளவிற்கு தலித் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தன்று சாதிய வன்மத்துடன் தலித் மக்களின் வீடுகளை இடித்த தங்கராஜ், பாதுகாப்பு வழங்கிய துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை மற்றும் குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணமும், இழப்பீடும் வழங்கிட வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply