தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி

கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்றுவந்த தினத்தந்தி நாளிதழின் அதிபர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவர் பத்திரிக்கை துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பங்காற்றியவர். தமிழகத்தில் தினத்தந்தி நாளிதழுக்கு சிறப்பான இடத்தை உருவாக்கியதில் பெரும் பங்காற்றினார்.

அவரது தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்கள் துவங்கி வைத்த கல்விப் பணியை செவ்வனே வளர்த்து, இன்று பொறியியல், விளையாட்டு, ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து துறை உயர் கல்விக்குமான தொடர் கல்வி நிறுவனங்களை உருவாக்கி, ஏழை எளிய மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்கியதில் மறைந்த சிவந்தி ஆதித்தன் அவர்களது பங்களிப்பு போற்றத்தக்கது.

விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆசிய கைப்பந்து கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவராகவும், அகில இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். அவரது சேவையைப் பாராட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் உடலுக்கு இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Check Also

உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்!

மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து ...

Leave a Reply