திருத்தப்பட்ட கடற்கரை மேலாண்மை திட்ட நகல் – கருத்துக்கள், ஆட்சேபணைகள் தெரிவிப்பதற்கான காலத்தை நீட்டிக்க

திருத்தப்பட்ட கடற்கரை மேலாண்மை திட்ட நகல் – கருத்துக்கள், ஆட்சேபணைகள் தெரிவிப்பதற்கான காலத்தை நீட்டிக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் கடிதம்

27.03.2018

பெறுநர்:
உயர்திரு. அரசுச் செயலாளர்,
சுற்றுச் சூழல் துறை,
தமிழ்நாடு அரசு,
சென்னை – 600 009.

வணக்கம்.

பொருள்: திருத்தப்பட்ட கடற்கரை மேலாண்மை திட்ட நகல் – கருத்துக்கள், ஆட்சேபணைகள் தெரிவிப்பதற்கான காலத்தை நீட்டிக்க கோருதல் சம்பந்தமாக:

2018 பிப்ரவரி மாதம் 19 ம் தேதி தமிழக அரசு சார்பில் தங்களது துறை திருத்தப்பட்ட கடற்கரை மேலாண்மை திட்ட நகலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அதற்கு பொதுமக்களின் கருத்துக்களையும், ஆட்சேபணைகளையும் 45 தினங்களுக்குள் தெரிவிக்க கோரியிருந்தது. ஆனால் அந்த அறிவிப்பு ஆங்கிலத்தில் இருந்ததோடு, அதனை சாதாரண மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பத்திரிகைகள் மூலமாகவோ, இதர வகையிலோ விளம்பரப்படுத்தவில்லை. ஏனவே அரசாங்கம் மக்களுடைய கருத்துக்களை அறிவதில் அக்கறை காட்டாமல் வெறும் சம்பிரதாயமாகவே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனக் கருத இடம் உள்ளது. கடற்கரை பகுதி பெரும்பான்மை மக்கள் குறிப்பாக மீனவ மக்கள் ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் அல்ல. எனவே, அரசு உண்மையில் மக்களுடைய கருத்துக்களை அறிய வேண்டுமென்று விரும்பி இருந்தால் அதனை தமிழில் பிரபல பத்திரிகைகள் மூலமாக அறிவித்து, மக்களுடைய கருத்துக்களைக் கேட்டிருக்க வேண்டும்.

மேலும், இதற்கான ஆட்சேபணைகளைத் தெரிவிக்க 45 நாட்கள் அவகாசம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பே மக்களிடம் சென்றிராத நிலையில் அதற்கான ஆட்சேபணைகளை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அப்பகுதி மக்களால் அனுப்பப்படுவது சாத்தியமற்றதாக உள்ளது. அதுமட்டுமன்றி தற்போது கிறிஸ்தவ மக்கள் தவக்காலம் எனும் விரதநாட்களை அனுஷ்டித்து வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகை வரையிலும் அவர்கள் மத ஈடுபாட்டுடன் உள்ள காலமாக உள்ளது. எனவே, அவர்கள் இந்த நகல் திட்டத்தை குறித்து விவாதித்து, உண்மை நிலையைப் புரிந்து உரிய கருத்துக்களை தெரிவிக்க இயலாத நிலையில் உள்ளனர். தென்மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதி மக்களும், மீனவர்களும் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் என்பதை தாங்களும் அறிவீர்கள்.

எனவே, மேற்கண்ட திட்ட நகலை தமிழில் பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வெளியிடவும், கருத்துக்கள், ஆட்சேபணைகள் கூறுவதற்கான கால அவகாசத்தை 2018 மே மாதம் 30ம் தேதிவரை நீட்டிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

உண்மையுள்ள,
கே. பாலகிருஷ்ணன் EX.MLA
மாநிலச் செயலாளர் – சிபிஐ (எம்)

Check Also

கருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து

நமது தாய்த்திருநாடு 72வது விடுதலைத் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...