திருப்பூர் வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துக!

திருப்பூர் வெள்ள நிவாரணப்பணிகளை துரிதப்படுத்துக! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்குக!! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சமீபத்தில் ஏற்பட்ட பெரும் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக திருப்பூர் மாநகரும் அதன் சுற்றுப்புற பகுதிகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து வாழ வழியின்றி தவிக்கின்றனர். குடிசைகளில் வாழ்ந்த தலித் மக்களும் இதர பகுதி மக்களும் அடைந்த துயரம் சொல்லிமாளாது. ஆயிரக்கணக்கான இ°லாமிய மக்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பக்ரீத் பண்டிகையைக் கூட கொண்டாட இயலவில்லை. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையிலும், சுற்று வட்டார குளங்கள் நிரம்பி வழிந்த நிலையிலும் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்காதது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் வெள்ளத்தால் 7 பேர் உயிரிழந்து விட்டதாகவும், பலர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்து அரசின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.

திருப்பூர் நகரில் குடிநீர், மின்சாரம், சாலை, வடிகால் உள்பட அனைத்து கட்டமைப்புகளும் வெள்ளத்தால் முற்றிலும் சீர்குலைந்துள்ளன. வெள்ளம் ஓரளவு வடிந்த பகுதிகளிலும் கூட தெருக்கள் மட்டுமல்ல ஏராளமான வீடுகளிலும் சேரும், சகதியும், கழிவுகளும் தேங்கியுள்ளன. ஏராளமான மாணவ மாணவிகள் வெள்ளத்தில் தங்கள் பாடப் புத்தகங்களையும், நோட் புத்தகங்களையும் இழந்துள்ளனர். ஏராளமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இத்தகைய சூழலில் திருப்பூர் சுற்றுப் புறங்களில் தொற்று நோய் பரவுவதற்கான அச்சறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநில அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு நிவாரணப் பணிகளை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ள ரூ. 2 லட்சம் நிவாரணம் போதாது. இதனை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்குவதோடு காயமடைந்தவர்களுக்கும், உடைமைகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும். வெள்ளத்தால் பல பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்துவது, தொற்றுநோய் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்கான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது, சுத்தமான குடிதண்ணீர் வழங்குவதை உத்தரவாதப்படுத்துவது, பழுதடைந்த சாலைகள், பாலங்களை துரிதமாக சரிசெய்வது, பாடப்புத்தகங்கள், நோட்டுகளை இழந்த மாணவ மாணவிகளுக்கு புதிதாக அவற்றை வழங்க ஏற்பாடு செய்வது, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அவர்கள் தங்கியிருந்த இடங்களுக்கும், வீடுகளுக்கும் உரிய நிவாரணப் பணிகளுக்குப் பிறகு காலதாமதமின்றி அனுப்பி வைப்பது, அதுவரை முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைப்பதை உத்தரவாதம் செய்வது போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுமாறும், இத்தகைய நிவாரணப்பணிகளுக்கு தேவையான நிதியை மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் ஒதுக்குமாறும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

 

Check Also

உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக ஈரோட்டில் போராடிய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

உயர்மின் அழுத்த கோபுரங்களை விளை நிலங்களில் அமைப்பதை கைவிடவும், மாற்றுப் பாதையில் கேபிள் மூலமாக கொண்டு செல்லவும் வலியுறுத்தி இன்று ...

Leave a Reply