திருவண்ணாமலை பக்கிரிபாளையம் ஊராட்சியில் இஸ்லாமிய பெண்கள் கொலை மற்றும் பாலியல் தாக்குதல் தொடர்பான கடிதம் …

21.08.2017

பெறுநர்

திரு. ஆசிரியர் அவர்கள்,

நாளிதழ் / தொலைக்காட்சி,

சென்னை.

 

அன்புடையீர், வணக்கம்.

இத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், “திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் – பக்கிரிபாளையம் ஊராட்சியில் இஸ்லாமிய பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொலை மற்றும் பாலியல் தாக்குதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி” மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி

கே. பழனிச்சாமி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிட வேண்டுகிறோம்.

இப்படிக்கு,

– வெ. ராஜசேகரன்,

அலுவலகச் செயலாளர்

———————————————————————————————————————————————

 

 

 

21-8-2017

பெறுதல்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,

தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை – 600 009.

பொருள்:-       திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் – பக்கிரிபாளையம் ஊராட்சியில் இஸ்லாமிய பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள கொலை மற்றும் பாலியல் தாக்குதல் தொடர்பாக…

—-

அன்புடையீர், வணக்கம்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பக்கிரிபாளையம் காயம்பட்டு கூட்டு சாலை அருகில்  கடந்த 13-8-2017 அன்று நள்ளிரவில் அமானுல்லா என்பவரின் மனைவி சாகிதா (48 வயது), ஷானா என்பவரின் மகள் ரிஸ்வானா (வயது 8) ஆகியோர் மர்ம நபர்களால் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சாகிதா தற்போது கோமா நிலையில் சென்னை அரசு மருத்துவமனையிலும், ரிஸ்வானா பெங்களூரு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோல் பக்கிரிபாளையம்  ஊராட்சிக்குட்பட்ட பெங்களூரு பிரதான சாலையில் வசிக்கும் அஸ்மத்பீ (வயது 90), தில்ஷாத்பீ(வயது53) ஆகிய மாமியார், மருமகள் இருவரும் கடந்த 16-8-2017 அன்று மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அஸ்மத்பீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தில்ஷாத்பீ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்டுள்ள 2 சம்பவங்களும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  ஆகஸ்ட் 13 அன்று நடந்த தாக்குலுக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 14 அன்று மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கம் கமிட்டி சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அதே கிராமத்தில் ஆகஸ்ட் 16 அன்று இருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. காவல்துறையின் அலட்சியப்போக்கே இந்த படுகொலைகளுக்கு காரணமாகும்.

தமிழக முதல்வர் உடனடியாக தலையீடு செய்து, இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கொடூர கொலை சம்பவங்களை புரிந்த மர்ம நபர்கள் அனைவரையும் கைது செய்து பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக்குற்ற சட்டத்தின் கீழ்  உரிய நடவடிக்கை எடுத்திடவும், படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்கிடவும், சென்னை அரசு மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் சாகிதாவுக்கு உயர்சிகிச்சை அளித்திடவும், பக்கிரிபாளையம் கிராமத்தில் உள்ள இஸ்லாமிய சமூக மக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கிடவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட  கேட்டுக் கொள்கிறோம்.

ஆகஸ்ட் 13 அன்று சம்பவத்தை தொடர்ந்து உடனடி தலையீட்டை வலியுறுத்தி மனு கொடுத்தும் அவசரம் கருதி உரிய நடவடிக்கை எடுக்காது அலட்சியப்போக்குடன் நடந்து கொண்ட திருவண்ணாமலை செங்கம் வட்டார காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுத்திடவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

/ஒப்பம்

(ஜி. ராமகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

 

Check Also

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளரை தனது சொந்த மேடையிலிருந்து ஆதரிப்பது என முடிவு

30.11.2017 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (30.11.2017) கோவையில் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் தலைமையில் ...