தேர்தல் ஆணையம் பிற்ப்பித்துள்ள 144 தடை உத்தரவை திரும்ப பெற சிபிஎம் வலியுறுத்தல்

22-4-2014

பெறுநர்

    திரு. தலைமை தேர்தல் அதிகாரி அவர்கள்,
    தமிழ்நாடு அரசு,
    தலைமைச் செயலகம்,
    சென்னை – 600 009.

அன்புடையீர்! வணக்கம்.

பொருள்:- தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 144 தடையுத்தரவை திரும்பப் பெறக் கோருதல் சம்பந்தமாக – – –

இன்று மாலை (22-4-2014) 6 மணி முதல் வியாழக்கிழமை (24-4-2014) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு தமிழகமெங்கும் பிறப்பிக்கப்படுகிறது என்று தாங்கள் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததை  தொலைக்காட்சியின் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்தலுக்கு முந்தைய நாளில்  மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

பொதுவாக, இதுபோன்ற தடை உத்தரவுகள், அசாதாரண காலங்களில்  அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கு குலையும்போது, அமைதியை நிலை நாட்டவும், சட்டவிதிகள் மீறலைக் கட்டுக்குள் கொண்டு வரவும் பிறப்பிக்கப்படுகிற உத்தரவுகள் ஆகும்.

ஆனால், தேர்தல் காலங்களில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டால், அது சாதாரண ஜனநாயக செயல்பாட்டை முடக்குவதுடன், நியாயமான தேர்தல் சார்ந்த பணிகளைச் செய்வதற்கும் தடையாக இருக்கும். மேலும், சட்டத்தை அமல்படுத்துகிற இடத்தில் உள்ள காவல்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகள், இதுபோன்ற தடை உத்தரவுகள் மூலம் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் வாய்ப்பினை உருவாக்கும்.

தேர்தல் என்பதே ஜனநாயகச் செயல்பாட்டின் உச்சமாக இருக்கும்போது – ஜனநாயகச்  செயல்பாட்டை முடக்குகிற எந்த நடவடிக்கையும் தேர்தலுடன் இணைந்து செல்ல முடியாது. என்ன நியாயம் கூறினாலும், தனது அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிப்பதை ஜனநாயகத்தை நேசிக்கிற இயக்கங்கள் ஏற்றுக் கொள்ளாது.

எனவே, தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களின்படி  ஜனநாயக ரீதியாகத் தேர்தலை நடத்திட வேண்டுமெனவும், பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.                          

இவண்,

(டி.கே.ரங்கராஜன், எம்.பி.),
மத்தியக்குழு உறுப்பினர்,
சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழுவிற்காக

Check Also

நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்! – யூசுப் தாரிகாமி

பாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்! - யூசுப் தாரிகாமி

Leave a Reply