தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுக / தவறான அனுகுமுறையை கைவிடுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்  நவம்பர் 16-17, 2011 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி, ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், டி.கே. ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுக – தவறான அணுகுமுறையை கைவிடுக!

தமிழகத்தில் நடந்து முடிந்த  சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் இருந்த திமுக தோற்கடிக்கப்பட்டு அதிமுக அரசு பொறுப்பேற்றுள்ளது. தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவது போன்ற மக்கள் நலத் திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. பள்ளிகள் – கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வது உள்ளிட்ட பல அறிவிப்புகள் சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் விதிகள் உருவாக்கப்பட்டு தனியார் கல்வி நிறுவனங்களின் 25 சதவிகிதமான ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் எப்படி தேர்வு செய்வது என்று விதியில் கொண்டு வர வேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்றதும் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற நில மோசடி, நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன் நிலமிழந்தவர்களுக்கு நிலத்தை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி என்ற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. அதேசமயம் அதிமுக அரசின் தவறான நடவடிக்கைகளை எதிர்த்தும் குரல்கொடுத்து வருகிறது.

சமச்சீர் கல்விக்கான பொதுப்பாடத்திட்ட செயலாக்கத்தை முடக்கிய தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இளைஞர் – மாணவர் – கல்வியாளர்கள் உள்ளிட்டு பொதுமக்களின் வலுவான போராட்டங்கள் நடைபெற்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகே சமச்சீர் கல்வியை செயல்படுத்த அதிமுக அரசு முன்வந்தது. பரமக்குடியில் தலித் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியது. ஏற்கனவே செயல்பட்டு வந்த கலைஞர் வீடுகட்டும் திட்டம், மருத்துவக்காப்பீடு திட்டம் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சமூக நலப்பாதுகாப்புத் திட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு மாறாக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் இத்திட்டங்கள் தொடங்கப்படாமல் காலதாமதப்படுத்தப்படுவதால் ஏற்கனவே பயனடைந்த மக்கள் தற்போது காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பலநூறு கோடியில் கட்டப்பட்ட புதிய சட்டமன்ற வளாகம் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்படாமலேயே உள்ளது. சேலத்தில் கடந்த ஓராண்டு காலமாக செயல்பட்டு வந்த பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. நூலகத்திற்கென வடிவமைக்கப்பட்டு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு செயல்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது – இந்நூலக கட்டிடத்தை குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவது என்ற அரசின் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சென்னை உயர்நீதிமன்றம் அரசின் அறிவிப்பிற்கு தடை விதித்துள்ளது. கல்வியாளர்கள், மாணவர்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரின் அழுத்தமான கண்டனத்திற்குப் பிறகும் அரசு தனது அறிவிப்பை கைவிடவில்லை. 

பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை கடந்த திமுக அரசு நிரந்தரம் செய்யத் தவறியது. இப்பணியாளர்களை அதிமுக அரசு ஒரு அரசாணையின் மூலம் அதிரடியாக பணிநீக்கம் செய்து அவர்களையும், அவர்தம் குடும்பத்தினரும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த பின்னரும் இப்பணியாளர்களுக்கு தமிழக அரசு வேலை வழங்க மறுத்து வருகிறது. இதனால் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
 

திமுக ஆட்சி காலத்து தவறுகளை களைந்திடுக!

திமுக ஆட்சிக்காலத் திட்டங்களில் உள்ள குறைபாடுகள், தவறுகள், முறைகேடுகள், ஊழல்கள் ஆகியவை களைந்தெறியப்பட வேண்டுமென்பது தவறல்ல. அதேசமயம் முந்தைய ஆட்சிக்காலத்து திட்டமென்பதால் அவைகளை ரத்து செய்வது, மாற்றுவது என்ற அதிமுக அரசின் அணுகுமுறை ஆரோக்கிய அரசியலுக்கு உகந்ததல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

மக்கள் நலப்பணியாளர்களை பணியில் அமர்த்திடுக!

மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம் பேரின் பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டு அனைவரும் நிரந்தரமாக பணியில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும். சேலம் பல்நோக்கு மருத்துவமனை தொடர்ந்து செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.  அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போது செயல்படும் இடத்திலேயே தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.  குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனைக்கு பொருத்தமான இடத்தை தேர்வு செய்து பணிகளை தொடங்கிட வேண்டும். ஏற்கனவே அறிவித்துள்ள பல்நோக்கு சிறப்பு பெண்கள் மருத்துவமனை பணிகளையும் துவங்கிட வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்திடவும், தேவையான மருத்துவ வசதிகளைச் செய்திடவும், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பணியிடங்களை பூர்த்தி செய்திடவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

திமுக ஆட்சியில் தீர்வு காணாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்க

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் எண்ணற்றவை உள்ளன. பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுப்பது, சங்கம் அமைத்த தொழிலாளர்களை பழிவாங்குவது, தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பது போன்றவை தொடர்ந்தன. திமுக ஆட்சிக் காலத்து மின்வெட்டு தற்போது அதிகரித்துள்ளது. பல லட்சம் பேருக்கு இலவச குடிமனைப்பட்டா வழங்கப்படாமல் உள்ளது. வனஉரிமைச் சட்டமும் தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசுத் துறையில் 2 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளது. கொலை, கொள்ளை, லாக்கப் மரணங்கள், திமுக ஆட்சி காலத்து காவல்துறை அத்துமீறல்கள் இன்றும் தொடர்கின்றன.

இந்தக் குறைபாடுகளையெல்லாம் களைந்தெறியும் வகையில் குடிமனைப்பட்டா வழங்குவது, மின்வெட்டை போக்கி சீரான மின்விநியோகம் வழங்குவது, அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வது, காவல்துறையின் அத்துமீறல்களை தடுப்பது, வனஉரிமை சட்டத்தை அமலாக்குவது, தொழிற்சங்க அங்கீகாரம் – கூட்டுப்பேர உரிமை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்திட அதிமுக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
 

உணவுப்பாதுகாப்பை உறுதி செய்க! தீண்டாமைக்கு முடிவு கட்டுக!

தமிழகத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கிடவும்; ரேசன் கடைகளில் மாதந்தோறும் மண்ணெண்ணெய் கிடைப்பதை உறுதிப்படுத்திடவும், விலையில்லா அரிசி போல் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் கிடைக்கச் செய்திடவும், பொதுவிநியோகத் திட்டத்தை பலப்படுத்தி உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்; பொருளாதாரத்தில் விளிம்பு நிலையில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றிடவும்; அனைத்து தரப்பு மக்களும் சம அந்த°துடன் சம வாய்ப்புக்களை பெறும் சூழல் உறுதிப்படுத்திடவும், உத்தபுரத்தில் இருந்தது போல் தமிழகத்தில் இன்றும் தொடரும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும் உரிய நடவடிக்கைகளை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஇஅதிமுக அரசை வலியுறுத்துகிறது.

மத்திய அரசின் தவறான கொள்கையை எதிர்த்திடுக!


காங்கிர°-திமுக தலைமையிலான மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் உணவுப்பொருட்கள், பெட்ரோல் – டீசல், உரம் ஆகியவற்றின் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை; பொதுவிநியோகத்திற்கு வழங்கப்படும் உணவுபொருட்கள், மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு வெட்டிச் சுருக்கியுள்ளது. சில்லரை வர்த்தகம், உயர்கல்வி, பென்சன் வைப்பு நிதி ஆகியவற்றில் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; உரம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பதுக்கலினால் உரப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இலங்கையில் யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண ராஜிய ரீதியில் மத்திய அரசு இலங்கை அரசை போதுமான அளவில் நிர்ப்பந்திக்கவில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுபோன்ற மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கையை எதிர்த்து மக்கள் நலனை பாதுகாத்திட மாநில அரசு முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

பால் விலை, பேருந்து – மின்சாரக் கட்டண உயர்வை திரும்ப பெறுக!

உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அதிமுக அரசின் பால் விலை உயர்வு, பேருந்து – மின்சாரக் கட்டண உயர்வு அறிவிப்பு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது. இதனால் விளிம்பு நிலையில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை எளிய மக்கள் விழிபிதுங்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சரிவு ஏற்படும். சாமானிய மக்களைப் பாதிக்கும் இந்த கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக அரசை வலியுறுத்துகிறது.

மத்திய – மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் இயக்கங்கள்

மக்களை கடுமையாக பாதித்துள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், அனைத்து மட்ட ஊழலை எதிர்த்தும், அனைவருக்கும் நிலம், வேலை, உணவு, இருப்பிடம், சுகாதாரம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், தமிழக அரசு அறிவித்துள்ள மக்கள் நலத் திட்டப் பயன்கள் அனைத்தும் பயனாளிகள் அனைவருக்கும் கிடைத்திடவும், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் அதிகாரம் கிடைத்திடவும், மக்கள் நலன் காத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சுயேச்சையாக தொடர் போராட்டங்களை நடத்துவதென்றும்; இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து இயக்கம் நடத்துவதென்றும் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானிக்கிறது.


 

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply