தோழர் ஐ.மாயாண்டி பாரதி மறைவு: சிபிஐ(எம்) இரங்கல்!

விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், ஆற்றல்மிக்க எழுத்தாளரும், பேச்சாளரும், பத்திரிகையாளருமான தோழர் ஐ.மாயாண்டிபாரதி (வயது 98) காலமானர் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.

மதுரையில் பள்ளியில் படிக்கும் போதே, சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் மாயாண்டி பாரதி. 1931 – ஆம் ஆண்டு மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆவேசமான ஊர்வலத்தில் பங்கெடுத்தார். 1950 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையில் பலர் கொல்லப்பட்டனர். அப்படுகொலைகளைக் கண்டித்து பேசிய ஐ.மாயாண்டி பாரதி மீது மதுரை சதி வழக்குத் தொடுக்கப்பட்டு 4 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். நெல்லை சதிவழக்கில் சேர்க்கப்பட்ட ஐ.மாயாண்டி பாரதி உள்ளிட்ட தலைவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.

1956 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ரோசன் பார்க் சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னை அமெரிக்க தூதரகத்தின் முன் நடைபெற்ற போராட்த்தில் பங்கேற்றதால் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1968 ஆம் ஆண்டு கீழவெண்மணிப் படுகொலைகளைக் கண்டித்து நடத்தப்பட்ட கண்டனப் போராட்டத்தில் 144 தடையை மீறிக் கலந்துகொண்டதனால் கைது செய்யப்பட்டார். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த இவர், தனது 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் தமிழகத்தில் இடதுசாரி இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். சில ஆண்டுகள் தலைமறைவாக இருந்தும் இயக்கப்பணியாற்றிவர்.

1954 ஆம் ஆண்டு ஜனசக்தி ஏட்டில் சேர்ந்து ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தீக்கதிர் நாளேட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். சோவியத் யூனியன் சென்ற பத்திரிகையாளர் குழுவில் தீக்கதிர் சார்பில் தோழர் ஐ.மாயாண்டி பாரதியும் இடம் பெற்றிருந்தார். ஜனசக்தியும், தீக்கதிரிலும், செம்மலரிலும் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழகம் முழுவதும் சென்று மக்களை ஈர்க்கக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளராக அவர் திகழ்ந்தார்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பாவலர் வரதராஜன் சகோதரர்கள் உள்ளிட்ட முற்போக்கு இயக்க கலைஞர்களை அரவணைத்து வளர்த்தவர் தோழர் ஐ.மாயாண்டி பாரதி. தோழர் ஐமாபா என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஐ.மாயாண்டி பாரதி விடுதலைப் போராட்டக் காலம் துவங்கி தன் இறுதிக்காலம் வரை சோசலிச லட்சியத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவராக விளங்கினார். அவரது மறைவு தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.

அவரது மறைவால் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்சியின் செங்கொடியை நாளை ஒரு நாள் அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

கஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக!

14-11-2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில ...