தோழர் பார்வதி கிருஷ்ணன் மறைவு சிபிஐ(எம்) அஞ்சலி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் பார்வதி கிருஷ்ணன் இன்று (20.02.14) மறைந்துவிட்டார். அவருக்கு வயது 95. மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற அவர் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார். அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்த குழுவில் தோழர்கள் என்.கே.கிருஷ்ணன், பூபேஷ் குப்தா, மோகன் குமாரமங்கலம், ஜோதிபாசு, பி.என்.ஹக்சர் ஆகியோர் இருந்தனர்.

அவர் தாயகம் திரும்பியவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் ஆலோசனைப் படி அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் தென்னிந்திய அமைப்பை உருவாக்கும் பொறுப்பினை ஏற்று செயல்பட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல அடக்குமுறைகளுக்கு ஆளானார்.

ஏஐடியுசி-யின் பல்வேறு பொறுப்புகளையும் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுள்ளார். கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து கட்சியை வழி நடத்தியுள்ளார். 1974-ம் ஆண்டு ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்ற போது அதன் போராட்டக்குழு உறுப்பினராக இருந்து போராட்டத்தை வழி நடத்தினார். இப்போராட்டத்தின் போது அவர் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிக்குழுவில் இடம் பெற்று சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா உட்பட பல வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.

பெண்கள் பிரச்சனைகளுக்காகவும், குறிப்பாக உழைக்கும் பெண்களின் பிரச்சனைகளுக்காகவும் வீதியில் இறங்கிப் போராடியிருக்கிறார். பாராளுமன்றத்திலும் அவர்களுக்காக குரலெழுப்பி பல உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

தோழர் பார்வதி கிருஷ்ணன் அவர்களின் மறைவு கம்யூனிஸ்ட்  இயக்கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதுடன் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்!

மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து ...

Leave a Reply