நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை:

துயரத்தின் பிடியில் தேசத்து மக்கள் மத்திய பாஜக அரசை எதிர்த்து நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் அறைகூவலுக்கேற்ப, தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(எம்எல்)-லிபரேசன், எஸ்.யு.சி.ஐ.(கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று (25.11.2016) சந்தித்து பேசினர்.

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம், மக்களின் மீது, குறிப்பாக விளிம்புநிலையில் உள்ள மக்களின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ள மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் கிளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளன.

தங்களின் அன்றாட தேவைகளுக்காக ரொக்கப்பரிவர்த்தனையையே முழுமையாக நம்பி வாழ்ந்து வந்த, உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள்,  நடுத்தர மக்கள், மீனவர்கள், சிறு வணிகர்கள், வியாபாரிகள், தினக்கூலி பெறுவோர், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத் தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்புற உழைப்பாளி மக்கள் அரசின் இந்நடவடிக்கையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மிகவும்கொடூரமான முறையில் வறிய நிலைக்கும் வறுமை நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

முறையான முன்தயாரிப்பு எதுவும் மேற்கொள்ளாமல், மத்திய அரசு இந்த அறிவிப்பினைச் செய்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் கூட நிலைமை இன்னும் சீரடையவில்லை. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே வங்கிகளுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்விளைவாக தங்களுடைய அன்றாடத்தேவைக்கு எவ்விதமான பணத்தையும்செலவு செய்ய முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் நிலைமை சீரடையும் வரை  பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திட அனுமதிக்க வேண்டும்; விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; வங்கிகளில் செயல்படா சொத்துக்கள் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ள – பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள – 11 லட்சம் கோடி ரூபாயையும் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்;  அவ்வாறு கடன் பெற்றவர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கிட வேண்டும்; சஹாரா-பிர்லா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ள விவரங்கள் குறித்து புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும்; வரி ஏய்ப்புக்கு வகைசெய்திடும் இரட்டை வரி ஒப்பந்தங்களை ரத்து செய்திட வேண்டும்; வெளிநாடுகளில் கணக்கு வைத்திருப்போர் பெயர்களை வெளியிட வேண்டும்; அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நவம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய மையங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து பகுதி மக்களும், வணிகர்களும், விவசாயிகளும், சிறு – குறு தொழில் முனைவோர்களும், ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

ஜி. ராமகிருஷ்ணன்

செயலாளர் – சிபிஐ (எம்)

இரா. முத்தரசன்

செயலாளர் – சிபிஐ

எஸ். குமாரசாமி

செயலாளர் – சிபிஐ (எம்-எல்)

. ரங்கசாமி

செயலாளர் – எஸ்யுசிஐ (சி)

Check Also

சாதி ஆணவப் படுகொலை: நீதிமன்றத் தீர்ப்பு சிபிஐ(எம்) வரவேற்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் டிசம்பர் 12-13 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு ...