நெல்லை பத்திரிக்கையாளர்கள் கைது – சிபிஐ(எம்) கண்டனம்

இஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சமபந்தமாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் செய்தி வெளியிட்ட மூன்று பத்திரிக்கையாளர்கள் மீது பணகுடி காவல்நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரோ குழு ஒன்று பாளையில் ஏற்பட்ட பிளவை சோதனை செய்து, ஆய்வுக்கு சில பகுதிகளை எடுத்து சென்றுள்ளனர். இஸ்ரோ மூலம் எந்த புகாரும் காவல்துறைக்கு கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் இந்த வழக்கு காழ்ப்புணர்ச்சியோடு செய்யப்பட்ட நடவடிக்கை என பத்திரிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது பேச்சுரிமை, எழுத்துரிமை மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கை வாபஸ் பெற வேண்டுமென்று மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்த பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுக்கப்பட்ட சூழலில், பத்திரிக்கையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், மறியலை கைவிட்டு டிஐஜியை சந்திக்க சென்ற பத்திரிக்கையாளர்களை கைது செய்த நெல்லை மாவட்ட காவல்துறையின் நடவடிக்கை முற்றிலும் தவறாகும். மேற்கண்ட நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Check Also

கம்யூனிஸ்ட்டுகளே மகத்தானவர்கள்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் கே.ராஜன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியும், குடும்ப பாதுகாப்பு நிதி ...