பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரைக்கு அருகில் உள்ள ஒழுகச்சேரி கிராமத்தில் நவம்பர் 1-ம் தேதி பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டு  5 சிறுவர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 6 பேர் ஒழுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் இருந்து வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஒழுகச்சேரி கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணமூர்த்தி, சுந்தர் ஆகிய இருவரும் உரிமம் பெறாமல் தனலட்சுமி என்ற பெயரில் தனித்தனியே 2 கொட்டகைகள் அமைத்து வெடி தயாரித்து வந்துள்ளனர். பட்டாசு தயாரிக்கும் பணிகளுக்கு அக்கிராமத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் உள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி, இரவு 10 மணி வரை வேலை வாங்கி உள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக தொழில் நடத்தியது மட்டுமல்லாமல், ஆபத்தான தொழிலில் குறைந்த கூலிக்கு சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இனிமேல் இதுபோன்ற துயரச்சம்பவங்கள் தஞ்சை மாவட்டத்தில் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

முறையான உரிமம் பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக தொழில் நடத்தி 9 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த உரிமையாளர்களை கைது செய்து அவர்கள் மீது சட்டரீதியிலான வழக்கு தொடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சட்ட விரோத தொழில்களை கண்டும் காணாமல் இருந்த வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலுள்ள பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்து முறைப்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. தஞ்சை மாவட்டத்தில் பட்டாசு ஆலைக்கு உரிமை வழங்கும் அதிகாரியையே விசாரணை அதிகாரியாக நியமிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக அரசுத்துறை செயலாளர் ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா  5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சையும், உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது .

Check Also

நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்! – யூசுப் தாரிகாமி

பாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்! - யூசுப் தாரிகாமி

Leave a Reply