பிப்ரவரி 20-21 பொது வேலை நிறுத்தம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் ஜனவரி 28, 29 ஆகிய தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, கே. பாலகிருஷ்ணன், பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நாள் கூட்டமான இன்று (28.1.2013)  நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
 
பிப்ரவரி 20-21 பொது வேலை நிறுத்தம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
 
2013 பிப்ரவரி 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் செய்வதென சி.ஐ.டி.யு., தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., உள்பட 11 மத்திய தொழிற்சங்கங்கள் மத்திய அரசு ஊழியர், மாநில அரசு ஊழியர், வங்கி, காப்பீடு, தொலைதொடர்பு, பாதுகாப்புத்துறை போன்ற 40க்கும் மேற்பட்ட துறைவாரியான சம்மேளனங்களும் இணைந்து அறைகூவல் விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் அகில இந்திய விவசாயிகள், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் பங்கேற்கின்றன.
விலைவாசியைக் கட்டுப்படுத்து; வேலைப்பாதுகாப்பை உறுதிப்படுத்தி வேலைவாய்ப்புகளை பெருக்கு; தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராக அமல்படுத்து; முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்; காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை அகற்று; சமவேலைக்கு சம ஊதியம் வழங்கி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 10,000/- என சட்டமியற்று; தொழிற்சங்க உரிமைகளை அமல்படுத்து என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
 
டீசல் விலையை அரசு தான் தீர்மானிக்கும் என்றிருந்த நிலையை கைவிட்டு எண்ணெய் கம்பெனிகளுக்கே அதை விட்டுவிட்டதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகக் கடுமையானது. பொதுத்துறையை விற்பனை செய்வது, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி மூலதனத்தை அனுமதிப்பது, பொதுவிநியோக பொருட்களுக்கும் பணமே தந்துவிடுவோம் என்று கூறி படிப்படியாக உணவு மானியத்தைக் கூட கை விடும் முயற்சி போன்ற கடும் தாக்குதலில் ஈடுபடுகின்ற மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள வேலை நிறுத்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் வரவேற்கிறது.
 
இதுபோன்ற வலுவான எதிர் நடவடிக்கைகளினால் மட்டுமே மத்திய அரசைக் கட்டுபடுத்த முடியும், ஏழை மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும் திட்டங்களை அமல்படுத்த வைக்க முடியும் என்று சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநிலக்குழு உறுதியாக கருதுகிறது.
 
எனவே, பிப் 20,21 தேதிகளில் நடைபெறும் அனைத்திந்திய வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் வெற்றிபெறச் செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.
 
இந்த உழைப்பாளி மக்களின் போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக இயக்கங்களும் பேராதரவு தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply