பிரிட்டிஷ் அரசால் பறிமுதல் செய்யப்பட்ட சிங்கார வேலரின் சொத்துக்களை மீட்டிடுக!

தீர்மானம்:4

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இந்தியாவிலேயே முதன்முறையாக உழைப்பாளர்களின் சார்பில் சென்னையில் மே தினத்தை கொண்டாடியவர் என்பது மட்டுமின்றி, உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்காகவே தன் வாழ்நாளைக் கழித்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் அடிமட்ட மக்களின் உயர்விற்கான இயக்கத்திற்கும் பெருமளவு பங்களிப்பைச் செய்தவர்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்த அவரது நீடித்த போராட்டத்தின் காரணமாக அன்றைய சென்னை மாகாண கவர்னர் வெல்லிங்டன் தோழர் சிங்காரவேலருக்குச் சொந்தமான, அப்போது மைலாப்பூர் என்றழைக்கப்பட்ட பகுதியில் இருந்த, தற்போது லேடி வெல்லிங்டன் வளாகம் என்றழைக்கப்படும், தற்போதைய விவேகானந்தர் இல்லத்தையும் உள்ளடக்கிய மிகப்பெரும் நிலப்பகுதியை தேச விரோதச் செயல்களுக்கான தண்டனை என்ற பெயரில் கைப்பற்றி, அவரது மனைவி பெயரில் ஒரு பள்ளியை நிறுவினார்.

விடுதலை பெற்று 66 ஆண்டுகள் ஆன பின்னரும் பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தக் கொடுஞ்செயலை திருத்தியமைக்க எந்த ஆட்சியும் முன்வரவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இந்தப் பகுதியை சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கல்வி வளாகம் என மாற்றி அமைத்து அந்த வளாகத்தில் சிங்காரவேலரின் சிலை ஒன்றை நிறுவ வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கபட்ட வழக்கும் அரசின் முன்முயற்சி இல்லாத நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திலும் அரசின் மட்டத்தில் இந்த மாற்றத்திற்கான கருத்துரு ஏதும் நிலுவையில் இல்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக இந்த வளாகத்தை சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரில் மாற்றி அமைத்து அவருக்கு உரிய கவுரவம் அளிக்க வேண்டும் என்றும், பள்ளிக்கு சிங்காரவேலர் பெயரை சூட்ட வேண்டுமென்றும் அந்த வளாகத்தில் அவருடைய முழு உருவ சிலை ஒன்றை நிறுவவேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிந்தவர்: எஸ்.கே.மகேந்திரன்

வழி மொழிந்தவர்: க.கனகராஜ்

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...