புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கிடுக!

தீர்மானம்:6

பிரஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரி 1954ல் விடுதலைப் பெற்றது. இந்திய ஒன்றியத்துடன் இணைந்தபோது புதுச்சேரி மத்திய அரசின் நேரடிப்பார்வையில் நிர்வகிக்கப்படும் என்றும், தேவையான நிதியும், அதிகாரமும் வழங்கப்படும் என்றும் இந்திய அரசு உறுதியளித்தது. இந்திய பிரதமராக அப்போது இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் புதுச்சேரி பிரஞ்சு இந்திய கலாச்சாரத்தின் சன்னல் என்று வர்ணித்ததோடு புதுச்சேரியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார். இந்தப் பின்னணியில் புதுச்சேரியில் 1963 முதல் தனிச்சட்டப்பேரவை தொடங்கி செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு மாநில திட்ட ஒதுக்கீட்டில் 70 சதவிகிதம் மானியம் மற்றும் கொடையாக வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பின்னணியில் 2007ல் திரு..ரங்கசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மாநிலத்திற்கு தனிக்கணக்கு தொடங்கியது. இதனால் மத்திய அரசு புதுச்சேரிக்கு வழங்கிவந்த 70 சதவிகித மானியத்தை 30 சதவிகிதமாக குறைத்தது. 2007-2008 நிதியாண்டில் 23.82 சதவிகிதமாக மானியம் வழங்கியது. தொடர்ந்து 30 சதவிகிதத்திற்கும் குறைவான மானியமே வழங்கப்பட்டுவருகிறது.

மாநிலத்திற்கு தனிக்கணக்கு தொடங்கிய நிலையிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் நிதிக்கமிஷனின் மாநிலப் பட்டியலிலும் இல்லை. யூனியன் பிரதேசங்களுக்கான பட்டியலிலும் இடம் பெறவில்லை. இதனால் புதுச்சேரி 2007 தொடங்கி நடப்பாண்டு வரையில் ரூ.6200 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியும், மக்களின் சமூகப் பொருளாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

மாநில அரசுக்கு வழங்குகிற திட்ட செலவில் 30 சதவிகிதம் நிதியை முழுமையாக வழங்குவதில்லை. மேலும் மத்திய வரிவருவாயில் பங்கிட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய சிறப்பு நிதி வழங்குவதில்லை. வெளிக்கடன் பெறுவதற்கும் உரிமையில்லை.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இருந்தபோதிலும் மத்திய அரசின் அனுமதிப்பெற்றே மாநில பட்ஜெட் போடவேண்டியுள்ளது. சட்டம் இயற்றும் அதிகாரம், கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம், நிதிநிர்வாகத்தில் அதிகாரமற்ற அரசாகவே உள்ளது.

புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டுமென 1987 முதல் 2012 வரையில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான அதிகாரம் குறித்த ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு 2006ல் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. சட்டப்பேரவையைக் கொண்ட யூனியன் பிரதேசங்களின் துரித வளர்ச்சிக்கு சட்டம், நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான அரசு அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்ற கூற்று ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்று என்று சர்க்காரியா கமிஷன் ஏற்கெனவே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் மாறியுள்ள நிலைமையிலும் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் இருப்பதை இம்மாநாடு கண்டிக்கிறது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சிக்கிம், அருணாசலப்பிரதேசம், மிசோரம், திரிபுரா, கோவா ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கவும், மத்திய கடன் தொகையை ரத்து செய்யவும் மார்க்சிஸ்ட் கட்சியின் 21வது தமிழ்மாநில மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தவர்: வி. பெருமாள்

வழிமொழிந்தவர்: சிவக்குமார் திருவண்ணாமலை

 

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...