மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம உதவியாளரை உயிரோடு புதைக்க முயற்சி ! மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள ஜெயபுரத்தில் சட்டவிரோத ஆற்றுமணல் கடத்தலைத் தடுத்த கிராம உதவியாளர் ராஜேந்திரனை (50) மணல் கொள்ளையர்கள் ஏற்கனவே மணல் அள்ளிய குழியில் தள்ளி உயிரோடு புதைக்க முயன்றுள்ளனர். மணல் கொள்ளையர்களின் இந்த கொலை முயற்சி நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜெயபுரத்தில் சட்டவிரோதமாக மணல் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகிறது. சம்பவத்தன்று திருட்டுத்தனமாக டிராக்டரில்  மணல் அள்ளப்படும் தகவலறிந்து, தடுக்க சென்ற கிராம உதவியாளர் ராஜேந்திரனை மணல் கொள்ளையர்கள் கடுமையாகத் தாக்கி, குழியில் தள்ளி உயிரோடு புதைக்க முயன்றுள்ளனர். இதைப் பார்த்து, அலறி ஒரு இளம் பெண் கொடுத்த தகவலின் பேரில் கிராம மக்கள் ஆற்றுப்படுகைக்குச் சென்று ராஜேந்திரனை மீட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக சட்டவிரோதமாக மணல் அள்ளும் திருப்பதியும் அவரது ஆட்களும்தான் கிராம உதவியாளர் இராஜேந்திரனை தாக்கி உயிரோடு, புதைக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே அவர் மீது பல வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. எனினும், பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவு காரணமாக காவல்துறை அவர்மீது உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதில்லை. இதன் காரணமாகவே திருப்பதி கும்பல் சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தெரிகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்தலைத் தடுத்த இளைஞர் சதீஷ்குமாரை (வயது 21) லாரியை ஏற்றி மணல் கொள்ளையர்கள் படுகொலை செய்தனர். சதீஷ்குமாரை படுகொலை செய்த கொலையாளிகள் மீது அரசும், காவல்துறையும் இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எடுக்காததின் காரணமாகவே மேற்கண்டது போன்ற மணல் கொள்ளை மற்றும் கொலைவெறி தாக்குதல்கள் தொடர்கின்றன.

எனவே, கிராம உதவியாளர் இராஜேந்திரனை கொலை செய்ய முயன்ற திருப்பதி கும்பலை உடனடியாக  கைது செய்து சட்ட ரீதியாக உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மணல் திருட்டை தடுக்கச்செல்லும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகுந்த காவல்துறை பாதுகாப்பு வழங்கிடவும், சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்திடவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மார்க்சிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply