போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தமிழக அரசே! பாலாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்து!!

போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள

பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு!! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வந்த பாலாற்றில் தொடர்ச்சியாக நடைபெறும் சட்டவிரோத மணற்கொள்ளையைக் கண்டித்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். அரசு அனுமதியோடும் மணல் தொடர்ந்து அள்ளப்படுகிறது. விதிமுறைகளுக்கு மாறாக மூன்றடி ஆழம் வரை மணல் எடுப்பதற்கு பதிலாக 30 அடி வரை எடுப்பதால் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதனால் பாலாற்றுப்படுகை சார்ந்த வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் வேகமாக அழிந்து வருகிறது. நிலத்தடி நீர்வளம் அழிந்து குடிநீர் தட்டுப்பாடும் தீவிரமாகியுள்ளது.

இந்நிலையில் காவேரிப்பாக்கத்தை அடுத்த களத்தூர் ஆற்றுப்படுகையில் மணல்குவாரி அமைப்பதற்கான முயற்சிகளை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். போராடிய மக்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டு பலரை சிறையிலடைத்துள்ளது.காவல்துறையின் இத்தகைய அடக்குமுறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்கள் நலன் கருதி மணல் கொள்ளையைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மணல் கொள்ளையை எதிர்ப்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை அரசு கைவிட வேண்டும்; போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், கைது செய்யப்பட்டுள்ளோரை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

பேராசிரியர் சுந்தரவள்ளி மீது அவதூறு பரப்புபவர்களை உடனடியாக கைது செய்க!

கருத்தை எதிர் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாத மதவெறியர்கள், பிற்போக்காளர்கள் அவரைத் தொடர்ந்து இழிவுசெய்து வருகின்றனர். இத்தகைய கோழைத்தனமான செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.