மனித உரிமை மீறல்கள்: இலங்கை அரசிடம் இந்தியா கடுமையாக அணுக வேண்டும்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் 12 வயது பாலச்சந்திரன் பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முந்தைய புகைப்படங்களையும் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் சேனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு பச்சிளம் குழந்தையை கொடூரமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் கொலை செய்துள்ள நிகழ்வு ஒன்றே இலங்கை அரசாங்கம் எத்தகைய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது என்பதற்கான உதாரணமாக விளங்குகிறது. 
 
நாகரீக உலகம் வெட்கித் தலைகுனிய வேண்டிய மிகக் கொடூரமான செயலை இலங்கை இராணுவம் நிறைவேற்றியிருக்கிறது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டவர்களும் அதற்குத் துணை போனவர்களும் அதை மறைத்தவர்களும் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். 
 
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்த மூவர் குழுவும் இலங்கை அரசு நியமித்த போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆலோசனைகள் குழுவும் அளித்த அறிக்கைகளில்  இத்தகைய போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இது குறித்து நம்பகத் தன்மையுள்ள எவ்வித விசாரணைக்கும் நடவடிக்கைகளுக்கும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தயாராக இல்லை. இந்திய அரசாங்கம் இப்பிரச்சனையில் மிகக் கடுமையாக இலங்கை அரசாங்கத்திடம் அணுக வேண்டும். 
 
போர்க் குற்றவாளிகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்களில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும். மேலும், சர்வதேச அமைப்புகளில் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் வகையில் இந்தியா தனது கருத்துக்களை முன்வைக்க வேண்டும். 
 
பாலச்சந்திரன் பிரபாகரன் கொலையை வன்மையாகக் கண்டிப்பதுடன் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் முறையில் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை இருக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
 

 

 

Check Also

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply