மாநிலக்குழு தீர்மானம் (14-15, 2015)

17-3-2015

மாநிலக்குழு தீர்மானங்களை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருக்ஷ்ணன்  வெளியிட்ட அறிக்கை. பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங் உடனிருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் 14 – 15, 2015 ஆகிய தேதிகளில் மகாபலிபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் – 1

மத்திய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்:

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டத்தை பிறப்பித்தது. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கிய பிறகு மசோதாவை அறிமுகப்படுத்தி மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா சட்டமானால் விவசாயிகளையும், விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும்,  விவசாயம் சார்ந்து வாழும் மக்களையும் கடுமையாக பாதிக்கும்.

நிலம் கையகப்படுத்தப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த பிறகே நிலம் எடுப்பது குறித்து முடிவு செய்ய வேண்டுமென்ற கடந்த சட்டததிலிருந்த சரத்து நீக்கப்பட்டு விட்டது. விவசாயிகளுடைய ஒப்புதலைப் பெறாமலேயே நிலத்தை கையகப்படுத்தலாம் என்ற விவசாயிகளின் வாழ்வாதார உரிமையை பறிக்கக்கூடிய பிரிவும் இம்மசோதாவில் உள்ளது. மேலும்,  எடுத்த நிலத்தை 5 ஆண்டுகள் பயன்படுத்தவில்லையென்றால் திருப்பித்தர வேண்டும் என்ற சரத்தும் நீக்கப்பட்டு விட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக நாடு முழுவதும் விவசாயிகளுடைய பல லட்சம் ஏக்கர் எடுக்கப்பட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும் தொழில் துவங்குவதற்காக அளிக்கப்பட்டது. ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற திட்டமே பெரும்பான்மையாக தோல்வியுற்றது என தணிக்கைக்குழு அறிக்கை கூறுகிறது. உண்மையில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் அந்நிய காலனியாதிக்க அரசின் 1894ம் ஆண்டு சட்டத்தின் கொடுமையான அம்சங்கள் மீண்டும் புகுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக்கூடிய மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருவதைப் புறக்கணித்து மக்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களித்த அதிமுக தற்போது அந்த மசோதாவில் இருந்த விவசாயிகளின் ஒப்புதல் வேண்டுமென்ற ஷரத்து மற்றும் சமூக பாதிப்புகள் குறித்த அறிக்கை ஆகியவற்றை நீக்கி  பாஜக முன்மொழிந்த மசோதாவை ஆதரித்து மக்களவையில் வாக்களித்துள்ளது. கோடானுகோடி விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய நிலம் கையகப்படுத்தும்  சட்டப் பிரச்சனையில் அதிமுக தலைமை 2013ல் எதிர்ப்பும், 2015ல் ஆதரவும் என இரட்டை நிலைபாட்டை மேற்கொண்டுள்ளது. 2013ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மேம்படுத்துவதற்கான திருத்தங்களை இடதுசாரிக்கட்சிகள் கொண்டு வந்த போது அதற்கு மாறாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கமாக இருந்த திமுக அன்றைய சட்டத்தை ஆதரித்தது.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மார்ச் 23 -ம் தேதி விவசாயிகள் சங்கங்களும், மற்றும் பல அமைப்புகளும் கண்டன இயக்கம் நடத்துகின்றன. இத்தகைய இயக்கத்தின் ஒருபகுதியாக தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, நெல்லை ஆகிய மையங்களில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவல் விடுக்கிறது. சென்னையில் சிஐடியு மற்றும் வெகுஜன அமைப்புகளும், தஞ்சையில் விவசாயிகள் அமைப்புகளும் நடத்துகிற கண்டன இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது முழு ஆதரவினை தெரிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம் – 2

சமூக விரோத – சாதிய சக்திகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்;

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் ஏறத்தாழ 100 படுகொலைகள் நடந்துள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படுகொலைகளில் 25 படுகொலைகள் சாதிய வன்மத்துடன் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலைமை இம்மாவட்டங்களில் மட்டுமின்றி அருகாமையில் உள்ள தென்மாவட்ட மக்களிடையேயும் அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது. சமூகவிரோத சக்திகள் மற்றும் சாதிய சக்திகள் மேற்படி இரண்டு மாவட்டங்களிலும் வலுவாக ஆதிக்கம் பெற்று வருவதை இப்படுகொலைகள் உணர்த்துகின்றன. இப்படுகொலைகள் சில மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகளாக அமைந்துள்ளன. வேறு சில கொலைகள் இம்மாவட்டங்களில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் பல்வேறு சாதிகளிடையே நிலவும் முரண்பாடுகள் தொடர்புடையதாக உள்ளன. சாதிய சக்திகள் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் சாதிய உணர்வுகளைத் தூண்டிவிட்டு, சாதியமைப்புகளின் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது கவலையளிப்பதாக உள்ளது.

இப்படுகொலைகள் ஒவ்வொன்றையும் தனித்தனி சம்பவங்களாகப் பார்க்காமல் சமூக விரோத சக்திகள் மற்றும் சாதிய சக்திகளின் திட்டமிட்ட வன்முறைகளாகப் பார்த்து உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே நிலைமையில் மாற்றம் ஏற்படுத்த முடியும். மாநில அரசு சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தாதது மட்டுமல்ல, மேற்கண்ட படுகொலை சம்பவங்களில் சிலவற்றுக்குப் பின்னால் உள்ள சாதிய சக்திகளின் பின்னணியைக் கண்டறிந்து உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்தகைய தொடர்ச்சியான வன்முறை மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள சமூக விரோத சக்திகளையும், சாதிய சக்திகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்ககிது.

தமிழக அரசு உடனடியாகத் தலையீடு செய்து சமூக விரோத சக்திகளுக்கு எதிராகவும், சாதியசக்திகளுக்கு எதிராகவும் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதோடு தாமிரபரணி ஆற்று மணல் மற்றும் நீர் கொள்ளையிடப்படுவதைத் தடுக்கவும், தீண்டாமை, சாதிய வேறுபாடுகளைக் களையவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறது.

அனைத்து ஜனநாயக சக்திகளும் இத்தகைய சமூக விரோத, சாதிய சக்திகளுக்கு எதிராக அணி திரளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அறைகூவல் விடுக்கிறது.

தீர்மானம் – 3

தமிழக கடற்கரையோர வளங்களை அழித்திடக் கூடாது; மீனவர் வாழ்வாதாரங்களை பறிக்கக் கூடாது;

13 மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழக கடற்கரை,  நிலத்திற்கும், கடலுக்கும் இடையே உள்ள வளம் நிறைந்த பகுதியாகும். தாதுக்கள், நீர் ஆதாரங்கள், பல்வகை பயிர்கள் விளையும் மண் ஆதாரம், பல்வகை உயிரினங்கள் வாழும் சூழல் உள்ள இந்த கடலோர நிலப்பகுதி மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளால் சீரழியும் நிலை உள்ளது.

ஏற்கனவே தாது மணற் கொள்ளை, இறால் பண்ணைகள் என பல வகையில் தமிழக கடற்கரையோரங்கள் வேகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள கடலோர மண்டல மேலாண்மை அறிவிப்பாணை காரணமாக கடற்கரையோர நிலங்கள் தனியார் கொள்ளைக்கு அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் சுற்றுலாத் தளங்கள், உயர்தர சொகுசு ஓட்டல்கள் கட்டுவதற்கும், எண்ணெய் சுத்திகரிப்பு மண்டலங்கள், அனல் மின் நிலையங்களை அமைப்பதற்கும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றின் காரணமாக 1076 கிலோ மீட்டர் தூரம் உள்ள தமிழக மீனவ கிராமங்கள் பாதிக்கப்படுவதோடு, மீனவர்கள் உள்ளிட்டு மக்கள் தங்களது வாழுமிடத்திலிருந்து வெளியேறும் நிலையும் உருவாகியுள்ளது.

தற்போது கடலோர மண்டல மேலாண்மை வரைபடம் எடுக்கும் பணி நடைபெறுகிறது. மீனவர்களுக்கு அவர்களது குடும்பம் குடியிருக்கும் இடம் மட்டுமல்லாது, படகு நிறுத்தவும், வலைகளை உலர்த்தவும், பெரிய வலையை விரிக்கவும் கடற்கரைப் பகுதிகள் தேவைப்படுகின்றன. குடியிருப்பு இடம் தவிர்த்த இதர இடங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் வரைபடத் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இது மீனவ சமுதாயம் உள்ளிட்ட கடலோர மக்களுக்கு வந்துள்ள மிகப் பெரிய ஆபத்தாக உள்ளது.

அதேபோன்று, அரசினால் அமைக்கப்பட்ட மீனாகுமாரி கமிஷன் அறிக்கையில் அன்னிய ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களுக்கு மீன்பிடிக்க அனுமதியளிக்கும் வகையில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இது நமது கடலோர நிலங்களை நமது மீனவர்களிடமிருந்து பறித்து அந்நியக் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் முயற்சியாகும்.

மீனவர்களின் வாழ்வதாரத்தைப் பறிக்கும் வகையில் இத்துறையில் மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வரும் உலகமய, நவீன தாராளமய கொளகைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மீனவர் சமூகத்திற்கு விரோதமான  மீனாகுமாரி கமிஷனின் பரிந்துரைகளை வாபஸ் பெற வேண்டுமெனவும், மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டுமெனவும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.

தீர்மானம் 4

ஆதார் அடையாள அட்டையைக் கட்டாயமாக்கும் முயற்சியைக் கண்டித்து தீர்மானம்:

ஆதார் அடையாள அட்டை குறித்த முடிவைக் கடந்த ஐ.மு.கூ. அரசாங்கம் எடுத்த போதே, மார்க்சிஸ்ட் கட்சி தன் ஆட்சேபணைகளைப் பதிவு செய்தது. உச்சநீதிமன்றமும், ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று 2013-இல் தெளிவாகத் தீர்ப்பளித்தது. மத்திய அரசின் ஆதாரைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற வாதத்தை நிராகரித்து அந்தத் தீர்ப்பை வழங்கியது. ஆனால் தொடர்ந்து அரசு வட்டாரங்களிலிருந்து, இதைக் கட்டாயமாக்குவது குறித்த தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

தற்போது, ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் சம்பளம் வழங்க ஆதார் எண் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும், அதே போல் வாக்காளர்கள் வாக்களிக்கவும் இந்த எண் கட்டாயமாக்கப்பட்டிருப்பதாகவும் ஊடகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இரண்டுக்குமே தற்போது உள்ள நிர்வாக ஏற்பாடுகள் போதுமானது. புதிதாக, ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய அவசியமில்லை. நடைமுறையில் பலருக்கு அந்த எண்ணும் கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றாத சூழலில், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணாக, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்குவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுதிபடத் தெரிவிக்கிறது. மத்திய அரசு இம்முயற்சிகளைக் கைவிட வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

Check Also

மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்

இந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், ...