உச்சநீதிமன்ற ஆணை: மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது; சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

அரசு சார்பில் வெளியிடப்படுகின்ற விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரின் படங்களை மட்டுமே வெளியிடலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களின் வரிப் பணத்தில் வெளியிடப்படும் அரசு விளம்பரங்களை மத்திய-மாநில அரசுகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது. முதலமைச்சர்களின் படத்தையே வெளியிடக் கூடாது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் படங்களை வெளியிட என்னென்ன காரணங்கள் கூறப்படுகிறதோ அவை அனைத்தும் முதலமைச்சர்களின் படங்களை வெளியிடுவதற்கும் பொருந்தும்.

தேர்தல் நெருங்கும் காலத்தில் சில அரசுகள் மக்களிடம் ஆதாயம் அடையும் வகையில் தொடர்ச்சியாக முழுப்பக்க விளம்பரங்களை வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் முதலமைச்சர் படங்களை வெளியிடலாம் என்கிற பரிந்துரையையும் உச்சநீதமன்றம் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது நியாயமற்றது.

தங்கள் கட்சியின் செயல்பாட்டையும் கொள்கைகளையும் விமர்சிக்கும் பத்திரிக்கைகளை வளைக்க ஆளும் கட்சிகள் அரசு விளம்பரங்களை தங்களின் ஆயுதமாகவே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் முறைப்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், முதலமைச்சர் படத்தை மாநில அரசு விளம்பரங்களில் தடை செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. எனவே, நீதித்துறை மேற்கண்ட தனது ஆணையை உரிய முறையில் திருத்தம் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

தமிழ் மக்களின் வரலாற்று பெருமையை உலகில் பறைசாற்றிட கீழடி ஆய்வுகளை மத்திய அரசு தொடர வேண்டும்!

கீழடினுடைய அகழாய்வை இன்னும் விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.