மார்க்சியம் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டி – பேரா. அருணன்

கார்ல் மார்க்ஸ் இரு நூற்றாண்டு விழா, நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா, சிந்தன் நூற்றாண்டு விழா என முப்பெரும் விழாக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழுவின் சார்பில் மதுரையில் மதுரை, டிச.19-ல் நடைபெற்றது.

மார்க்ஸ் ஒரு மருத்துவர் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்க கவுரவத் தலைவர் பேரா. அருணன் பேசியதாவது:-

மார்க்சியம் என்பது தத்துவார்த்தமான கருத்தியல் மட்டுமல்ல. அது நமது வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறது. 32 வயது வயதிலேயே புதுமையான தத்துவத்தை உலகிற்கு தந்தவர் கார்ல் மார்க்ஸ்.உலகில் என்ன நோய் இருக்கிறது; நோயின் மூலவேர் எது; அதற்கு எந்த மருந்தை பரிந்துரைக்க வேண்டுமெனக் கூறியவர் கார்ல் மார்க்ஸ். அவரது வாக்கியங்களில் முக்கியமானது ‘பணம் என்பது ஒரு பொருள் அல்ல; அது ஒரு சமூக உறவு’ என்பதாகும்.

பணத்தை மையமாக வைத்து உலகம் சுழல்கிறது. அது மனிதத்தை வைத்தல்லவா சுழல வேண்டும். பணம் என்ற பெரு நோய் இருப்பவர் இல்லாதவர்க்கான இடைவெளியை அதிகரிக்கிறது. மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை உருவாக்குகிறது. உலகம் முழுவதும் செல்வம் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்து கிடக்கிறது. அது சந்தை சார்முதலாளித்துவமாகவும், நெறியற்ற முதலாளித்துவமாகவும் மாறிவிட்டது. இதனால்தான் முதலாளித்துவ கட்டமைப்பு ஒழிய வேண்டுமென 150 ஆண்டுகளுக்கு முன்பே காரல் மார்க்ஸ் கூறினார். ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி போன்ற நாடுகளில் 60 சதவீத செல்வங்கள் 10 சதவீதம் பேரிடம் குவிந்து கிடக்கிறது. மற்றவர்களிடம் செல்வம் இல்லை.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் 2014-ஆம்ஆண்டு கணக்கின்படி ஒரு சதவீத பணக்காரர்களிடம் 49 சதவீத செல்வம் குவிந்து கிடக்கிறது. அது 2017-ஆம் ஆண்டில் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது. அந்த ஒரு சதவீத பணக்காரர்களிடம் குறிப்பிட்ட ஐந்து பணக்காரர்களின் சொத்து வேகமாக வளர்ந்து வருகிறது. பாரதிய ஜனதாவிற்கு ஐந்து மாதங்களில் நன்கொடையாக 80 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது என்று அன்னா ஹசாரே கூறியிருக்கிறார். அப்படி என்றால் எத்தனை லட்சம் கோடி அளவிற்கு மோடி ஆட்சியில் ஊழலும், முறைகேடும் நடைபெற்றிருக்கும். பணம் என்ற ஆதிக்கம் சாதி, மதவெறியைத் தூண்டிவிடுகிறது. முதலாளித்துவம் மனித உறவுகளை பண உறவுகளாக மாற்றிவிடும் என்று 150 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் எச்சரித்தார். அது தற்போது நிதர்சனமாகி இருக்கிறது. இந்த சமூக அமைப்பை மாற்ற வேண்டும். மனிதகுல வளர்ச்சி முதலாளித்துவ சமூகத்தோடு நின்றுவிடாது; அது அடுத்தகட்டத்தை நோக்கி நகரும்.

Check Also

CPIM

அனுபவத்திலிருந்து பாடம் கற்போம்! தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்!

அனுபவத்திலிருந்து பாடம் கற்போம்! தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்! போராட்டங்கள் மூலம் அரசியல் தலையீட்டை வலுப்படுத்துவோம்!