மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்

அதிமுகவின் அதிகாரப்போட்டிதிமுகவின் அதிகார வேட்கை புறக்கடை முயற்சியில் பாஜககண்டுகொள்ளாப்படாத மக்கள் பிரச்சனைகள் – பிப் 20-25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு இயக்கம்

தமிழக முதல்வராகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அஇஅதிமுகவில் சசிகலா தலைமையில் ஒரு பிரிவு, ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவு என பிளவுபட்டு கட்சிப் பொறுப்பு, ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றும் அதிகாரத்திற்கான போட்டியில் இறங்கினர். சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து சசிகலா சிறை சென்ற நிலையில் சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அமைச்சரவை அமைக்கப்பட்டு சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெறாத, தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஜனநாயக நடைமுறைக்கு புறம்பான – சபாநாயகர் மீதான தாக்குதல்கள், மைக்குகள் – சேர்கள் உடைப்பு, ஆவணங்கள் கிழித்து வீசப்பட்டது, சபாநாயகர் இருக்கையில் எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து ஆட்டம் போட்டது உள்ளிட்டவை நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் சட்டப்பேரவையில் ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியாக திமுக நடந்து கொண்டதா? என்ற கேள்வியை தமிழக மக்களிடம் எழுப்பியுள்ளது. இவையெல்லாம் அறவழிப் போராட்டம் என்று நம்பச் சொல்கிறது திமுக.

அதிகாரப் போட்டியால் அதிமுகவில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி, அங்கீகாரமற்ற அதிகாரத்திற்கு ஏங்கி ஆளுநரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது பாஜக.

கிரானைட் மலைகளை விழுங்கியது, தாதுமணலை கடத்தியது, ஆற்று மணலை தின்பது என இயற்கை வளக் கொள்ளைகளையும், அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் ஊழல் ததும்பி வழிகிறது. அடி முதல் நுனி வரை லஞ்சமின்றி எதுவும் நடக்காது என்ற நிலைமை உள்ளது. இதனை உரம்போட்டு வளர்த்ததற்கு அஇஅதிமுகவும்,  திமுகவுமே பொறுப்பாகும். இவர்களுக்கு தமிழக மக்கள் நலன் என்பது எள்ளளவும் கிடையாது.

அஇஅதிமுகவின் அதிகாரப் போட்டி, திமுகவின் அதிகார வேட்கை, பாஜகவின் புறக்கடை முயற்சி போன்றவற்றால் தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்சனைகள் கவனிக்கப்படாமல்  புறந்தள்ளப்பட்டுள்ளன.

விவசாயிகளின் தற்கொலை – அதிர்ச்சி மரணம், தமிழகம் முழுவதும் குடிநீருக்கு ஏற்பட்டிருக்கும் பஞ்சம், வறட்சியால் இடம் பெயர்தல், கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின்படி வேலையளிக்காதது, வேலை செய்தவர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கொடுக்காமலிருப்பது, ரேசன் பெறும் உரிமை மறுப்பது, நகரங்களிலும் – கிராமங்களிலும் தீவிரமாகி வரும் வேலையின்மை, நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்காமலிருப்பது இவையெல்லாம் ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படவே இல்லை.

இந்நிலையில் தமிழக அரசு. மக்கள் எதிர்கொண்டுள்ள உடனடி பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும், சட்டப்பேரவையை ஜனநாயகப்பூர்வமாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்தவுள்ளது. இதற்காக நடைபெறும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் இதர இயக்கங்களில் தமிழக மக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்!

மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து ...