மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தையும், சட்ட ரீதியான உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திடுக!

தீர்மானம்:6

பரந்து விரிந்த நமது இந்திய நாட்டில் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் கோடிக் கணக்கில் வாழ்கின்றனர். ஆனால், அவர்களின் கண்ணியத்தையும் சட்ட ரீதியான உரிமைகளையும் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன. முதலாவதாக நாடு முழுவதும் வாழ்கின்ற பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளை பற்றிய உறுப்படியான கணக்கெடுப்பே மத்தியமாநில அரசுகளிடம் இல்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளை பற்றிய முறையான அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 21-வது மாநாடு வலியுறுத்துகிறது.

இரண்டாவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் 2007 ஆம் ஆண்டு ஊனமுற்றோர் கன்வென்ஷன் விதிகளை இந்திய அரசு 7-வது நாடாக கையெழுத்திட்டு ஏற்றுள்ளது. அதன்படி, தற்போது அமலில் உள்ள லாயக்கற்ற 1995 ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் சட்டத்திற்கு பதிலாக ஐ.நா. விதிகளின் அடிப்படையில் புதிய உரிமைகள் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. எனவே, .நா. விதித்துள்ள சரத்துக்களை உள்ளடக்கிய புதிய மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை பாராளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுடன் விரைவில் நிறைவேற்ற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தற்போதும் பல சட்டங்கள், அரசாணைகள் அமலில் உள்ளபோதும், நாடு முழுவதும் அனைத்து விதங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பாரபட்சமாக நடத்தப்படுவதற்கும், பல லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வறுமையின் பிடியில் சிக்கி தவிப்பர்களாக, கையேந்துபவர்களாக ஆக்கப்பட்டுள்ளதற்கும் அரசுகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்நிலையில் மாற்றம் காண கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் சட்டப்படியான 3 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நீதிமன்றங்களுக்கு சென்றே உரிமைகளை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக 2013 அக்.8 ஆம் தேதிய உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய பின்னடைவு காலி பணியிடங்களை கண்டறிந்து பணி வழங்கிட மத்திய மாநில அரசுத்துறைகள் மறுத்து வருகின்றன. குறிப்பாக மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான இரயில்வே துறை, தமிழகத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், திருச்சி பாரத மிகு மின் நிறுவனம், சென்னை மெட்ரோ இரயில் கார்ப்பொரேஷன் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய இட ஒதுக்கீட்டை வழங்கிட இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 20, 30 ஆண்டுகளாக பதிந்து வைத்து வேலைக்காக காத்திருக்கும் பல்வேறு வகை மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை சுமார் 1,05,000 என அரசு தெரிவிக்கிறது. அதே வேளையில், மாற்றுத்திறனாளிகளுக்குரிய பணியிட வாய்ப்புகளை தராமல் மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றுவதில் தமிழக அரசும் அரசும் கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு, ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1107 பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. எனவே, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்குரிய இட ஒதுக்கீட்டை சட்டத்தின்படியும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் அளித்திட தமிழக அரசு முன்வரவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இந்த இட ஒதுக்கீட்டை கண்காணிப்பதற்கு தலைமைச் செயலாளர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைத்ததாக சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அந்தக்குழு கூடியதாக தகவல் இல்லை. எனவே, அக்குழு முறையாக வெளிப்படையாக கூடவும், அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்குரிய இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

கண்ணால் பார்த்து அறிய முடிகிற ஊனங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலேயே அடையாள சான்று வழங்க 2011 ஆம் ஆண்டு அரசாணை தமிழக அரசால் போடப்பட்டு 4 ஆண்டுகளாகியும் அமலுக்கு வரவில்லை. இதேபோல், போக்குவரத்து, திருமண உதவி உள்ளிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் பலவற்றுக்கு அரசாணைகள் மட்டுமே உள்ளன. பெரிய அளவிற்கு பயன்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையவில்லை. அதேபோல வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க மாற்றுத்திறனாளி சட்டத்திற்கு புறம்பாக கடும் விதிமுறைகள் தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்படுவதால் மாத பராமரிப்பு உதவிகூட பெற முடியாமல் மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வந்த பல லட்சக்கணக்கானவர்களுக்கு மறு தணிக்கை என்ற பெயரில் அபாண்டமாக இந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள பொருளாதாரச்சூழலில் அதனை குறைந்தபட்சம் ரூ.3000/- ஆக உயர்த்த கோரிக்கை உள்ள நிலையில் தமிழக அரசு இத்திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்கி நிறுத்தப்பட்டுள்ளவர்களுக்கும், விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அலைக்கழிக்காமல் உதவித்தொகைட வழங்கிட வேண்டுமென மாநாடு வலியுறுத்துகிறது.

மாற்றுத்திறனாளிகள் அனைத்து பொது இடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கும் எளிதாக சென்று வரும் வகையில் தமிழகத்தின் அனைத்து அரசு கட்டிடங்களும் தடையில்லா சூழலுடன், மாற்றுத்திறனாளி கழிவறை மற்றும் வாகன நிறுத்த வசதிகளுடன் வடிவமைக்கப்படுமென அரசாணை போடப்பட்டு இரண்டாண்டுகள் ஆகியும் சென்னை தலைமை செயலகமே அவ்வாற மாற்றி அமைக்காததை இந்த மாநாடு கண்டிக்கிறது. சட்டம் மற்றும் அரசாணையின்படி முதலில் அரசு கட்டிடங்களை தடையில்லா சூழலுடன் வடிவமைக்க மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி கல்வி மிக மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக காதுகேளாதோர் அரசு பள்ளிகளில் கடந்த 10 மற்றும் +2 பொது தேர்வுகளில் மிக மோசமான தோல்வி இருந்தது. அதேபோல வாய் பேசமுடியாத மாணவர்கள் கல்லுhரி படிப்புக்கு செல்ல வேண்டுமானால் சென்னைக்கு வந்தால் மட்டுமே கல்வி கிடைக்கும் நிலை உள்ளது. மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகள் 99.9 சதவீதம் தனியார் மட்டுமே நடத்துகின்றனர். ஆயிரக்கணக்கில் பெற்றோர்களிடம் பணம் பிடுங்கப்படுகிறது. எனவே, அனைவருக்குமான கல்வி என்பதில் மாற்றுத்திறனாளிகளுக்கும் தரமான கல்வி அளிக்கும் பொறுப்புகளை தமிழக அரசே ஏற்க இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

சமீப காலங்களில் மாற்றுத்திறனாளி பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் பல வடிவங்களில் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. விருத்தாசலம், பட்டுக்கோட்டை, விருதுநகர், சேலம், தேன்கனிக்கோட்டை, தற்போது காரைக்குடி என ஒரு சில சம்பவங்கள் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளன. எனவே, மாற்றுத்திறனாளி பெண்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மோசமான பாலியல் தாக்குதல்களை, பாலியல் துண்புறுத்தல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த அரசே பாதுகாப்பான தங்கும்விடுதிகளை நடத்துவது, சைகை மொழி பெயர்ப்பாளர்களை அரசு அலுவலகங்களில் நியமிப்பது போன்ற அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுக்க இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளி பிரச்சனைகளை கவனிக்க திறமையுள்ள துறையாக மாற்றுத்திறனாளி துறை மாற்றப்பட வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளி சட்டப்படி மாநில ஆணையருக்கு மாவட்ட உரிமையியல் நீதிபதிக்கு இணையான அதிகாரம் தரப்பட்டுள்ளன. இருப்பினும், நியமிக்கப்படுகிற மாநில ஆணையம் இந்த சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. எனவே, மத்திய மாற்றுத்திறனாளி ஆணையர் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளி உரிமைகளில் ஆர்வம் உள்ள ஆணையமாக செல்பட உரிய நவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தவர்: எஸ். நம்புராஜன்

வழி மொழிந்தவர்: ஏழுமலை (வேலூர்)

 

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...